கேரள மாநிலத்தின் மிக நீளமான சுரங்கப்பாதை திட்டமான வயநாடு – கோழிக்கோடு இடையேயான அனக்கம்பொயில்-கல்லாடி-மேப்பாடி சுரங்கப்பாதை கட்டுமானப் பகுதியில் திடீரென ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் சிக்கி, வடமாநில தொழிலாளர்கள் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். கடந்த சில மாதங்களாக அங்கு தங்கி பணியில் ஈடுபட்டு வந்த 20 தொழிலாளர்கள் வழக்கம்போல் வேலையில் இருந்தபோது, காலை 11.15 மணியளவில் மலையிலிருந்து பெருக்கெடுத்து வந்த நீரோடு மண்ணும் அடித்து வரப்பட்டு சாலையையும், சுரங்கப்பாதை நுழைவாயிலையும் மூடியுள்ளது.

இந்த நிலச்சரிவின் கோரப்பிடியில் சிக்கி அங்கிருந்த டேங்கர் லாரி ஒன்று பின்னோக்கி தள்ளப்பட, மற்ற வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் அலறியடித்தபடி உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு ஓடியுள்ளனர். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் கேரள முதல்வர் வி.டி.சதீசன் மீட்புப் பணிகளை உடனடியாக முடுக்கிவிட்டார். தேசிய பேரிடர் மீட்புப் படை, தீயணைப்புத் துறை மற்றும் போலீசார் இணைந்து கனமழைக்கு மத்தியிலும் சவாலான மீட்புப் பணிகளை முழு வீச்சில் மேற்கொண்டதன் பலனாக 7 தொழிலாளர்கள் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.

எனினும், இடிபாடுகளில் சிக்கி முதற்கட்டமாக 3 பேர் உயிரிழந்த நிலையில், இன்று காலை தேடுதல் பகுதியில் இருந்து மேலும் ஒரு தொழிலாளரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ஏ.பி.அனில்குமார் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளார். இதன் மூலம் பலி எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ள நிலையில், நிலச்சரிவில் சிக்கி மாயமான எஞ்சிய 4 தொழிலாளர்களைக் கண்டறியும் தேடுதல் பணி தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது.