நொய்டாவைச் சேர்ந்த 56 வயது நபர் ஒருவரின் வாழ்க்கைச் போராட்டம் இணையவாசிகள் அனைவரையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. சுமார் 14 ஆண்டுகள் ஒரு நிறுவனத்தில் பார்த்து வந்த வேலை திடீரெனப் பறிபோனதால், தனது வாழ்வாதாரத்திற்காக இந்தத் தள்ளாத 56 வயதிலும் அவர் டெலிவரி பாயாக  மாற வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டார். வயது முதிர்ந்த காலத்திலும் குடும்பத்தைக் காப்பாற்ற அவர் படும் கஷ்டங்களும், அவரது தற்போதைய நிலையும் ஒட்டுமொத்த சமூக வலைத்தளங்களையே அதிர செய்துள்ளது.

அண்மையில் அவர் டெலிவரி வேலைக்குச் சென்றபோது நடந்த ஒரு குறிப்பிட்ட ‘கறிவேப்பிலை’ விவகாரம் தான் தற்போது இணையத்தில் பலரையும் கண்ணீர் சிந்த வைத்துள்ளது. கார்ப்பரேட் நிறுவனங்களின் தற்போதைய எதார்த்த நிலையை சுட்டிக்காட்டி  கண்ணீருடன் பேசுகையில்,  “நாம் காய்கறிகளைச் சமைக்கும்போது சுவைக்காக முதலில் கறிவேப்பிலையைத் தான் சேர்க்கிறோம். ஆனால், அதே உணவைச் சாப்பிடும்போது, தட்டிலிருந்து முதலில் தூக்கி எறிவதும் அந்த  கறிவேப்பிலையைத் தான்!” என்று தனது வலியைக் கொட்டியுள்ளார். நிறுவனங்கள் தங்களின் வேலை முடிவடையும் வரை ஊழியர்களைப் பயன்படுத்திவிட்டு, பொருளாதார மந்தநிலை போன்ற காரணங்களைக் கூறி கறிவேப்பிலை போல தூக்கி எறிந்துவிடுகிறார்கள் என்ற அவரது ஆதங்க வார்த்தைகள், உழைக்கும் ஒவ்வொருவரின் மனதையும் பாதித்துள்ளது.