அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல உடற்பயிற்சி நிபுணரும், யூடியூபருமான கான்னர் மர்பி (32), தாய்லாந்தில் உள்ள ஒரு ஏரியில் மூழ்கி மர்மமான முறையில் உயிரிழந்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. சம்பவத்தன்று கடுமையான மன உளைச்சல் அல்லது விசித்திரமான நடத்தை காரணமாகச் சாலையில் அங்கும் இங்கும் ஓடிய கான்னர் மர்பி, போலீஸார் வருவதைக் கண்டு பயந்து அங்கிருந்த ஆழமான ஏரிக்குள் குதித்துள்ளார். நீச்சல் அடித்துக் கொண்டிருந்த அவர் திடீரென தண்ணீருக்குள் மூழ்கியதை அடுத்து, மீட்புக் குழுவினர் நீண்ட போராட்டத்திற்குப் பிறகு அவரது உடலைச் சடலமாக மீட்டனர். அவர் தங்கியிருந்த வாடகை வீடு முழுவதும் பெயிண்ட்களால் பாழாக்கப்பட்டிருந்ததும், அவரது காரில் ஊசிகள் மற்றும் சில மாத்திரைகள் கண்டெடுக்கப்பட்டதும் இந்த மரணத்தில் பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சமூக வலைத்தளங்களில் அதிகப் பார்வைகளை பெறுவதற்காகவும், ரசிகர்களைத் தன் பக்கம் ஈர்ப்பதற்காகவும் கான்னர் மர்பி தொடர்ந்து பல்வேறு விசித்திரமான மற்றும் ஆபத்தான வீடியோக்களை வெளியிடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். இதன் காரணமாக, அவர் உயிரிழந்த செய்தி வெளியான தொடக்கத்தில் இதுவும் அவரது வழக்கமான ‘பிராங்க்’ வீடியோவாகத்தான் இருக்கும் என நினைத்து ரசிகர்கள் பலரும் சமூக வலைத்தளங்களில் குழப்பமடைந்தனர். ஆனால், அவர் போதைப்பொருள் பயன்படுத்தியதால் இந்த விபரீத முடிவு ஏற்பட்டதா என்ற கோணத்தில் தாய்லாந்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வரும் நிலையில், இந்தச் சோகச் சம்பவம் சர்வதேச பிட்னஸ் உலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.