அமோனியா கசிவு ஏற்பட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்திய தொழிற்சாலைக்கு நேரில் சென்று ஆய்வு செய்யாத அமைச்சர் கீர்த்தனா, தற்போது அரசு பள்ளிக்கு சென்று மாணவர்களிடம் தேவையின்றி கேள்வி எழுப்பியது அத்துமீறல் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடுமையாகக் குற்றம் சாட்டியுள்ளார். மேலும், ஆங்கிலம் என்பது வெறும் தொடர்புக்கான மொழிதானே தவிர, அது ஒருபோதும் அறிவு ஆகாது என்ற மிக சாதாரணமான அடிப்படைக் கூட அமைச்சர் கீர்த்தனாவுக்கு தெரியவில்லை என்ற ரீதியில் சீமான் மிக காரசாரமாகப் பேசியுள்ளார்.

​தொடர்ந்து அமைச்சரின் இந்த அணுகுமுறையை விமர்சித்த சீமான், “அப்படியென்றால் சட்டமன்றத்தில் கடைசி வரிசையில் அமர்ந்திருப்பவர்கள் எல்லாம் அறிவு இல்லாதவர்களா? அதேபோல், சட்டமன்றத்தின் முதல் வரிசையில் சொகுசாக அமர்ந்திருப்பவர்கள் எல்லாம் அறிவு ஒளிச்சுடரா?” என்று மிக ஆவேசமாக கேள்வி எழுப்பியுள்ளார். அரசு பள்ளி மாணவர்களிடம் அமைச்சர் நடந்து கொண்ட விதம் தற்போது அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.