உத்தரப் பிரதேச மாநிலம் ஹமீர்பூர் மாவட்டத்தில், தேடப்பட்டு வந்த வாரண்டிக்கு பதிலாக அதே பெயர் கொண்ட மற்றொரு அப்பாவி இளைஞரை போலீஸார் தவறாகக் கைது செய்து, கொடூரமாக அடித்துத் துவைத்த மனிதநேயமற்ற சம்பவம் சோஷியல் மீடியாவில் வெளியாகி கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அங்குள்ள காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் (தரோகா) சுரேந்திர பால், ‘சிவராஜ்’ என்ற வாரண்டியை கைது செய்யச் சென்றபோது, அதே பெயர் கொண்ட ஒரு அப்பாவி இளைஞரை வலுக்கட்டாயமாகப் பிடித்துள்ளார்.

அந்த வாலிபரின் தாய் மற்றும் தங்கை கதறித் துடித்தும் கேட்காமல், நடுரோட்டில் குடும்பத்தினர் முன்னிலையிலேயே அவரைப் போலீஸார் மிருகத்தனமாகத் தாக்கியுள்ளனர். ​அதோடு நிறுத்தாமல், அந்த வாலிபரை காவல் நிலையத்திற்கு இழுத்துச் சென்று அங்கேயும் வச்சு வெளுத்து வாங்கியுள்ளனர். போலீஸாரின் கொடூரமான தாக்குதலால் காவல் நிலையத்திலேயே அந்த இளைஞரின் உடல்நிலை மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, உயிருக்கு ஆபத்தான நிலையில் அவரை மீட்டுப் போலீஸாரே மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஒரே பெயர் குழப்பத்தால் அப்பாவி வாலிபரை அடித்து துவைத்த போலீஸாரின் இந்த அராஜக வீடியோ இப்போது சோஷியல் மீடியாவில் சும்மா காட்டுத்தீ போல பரவி நெட்டிசன்களை ஆத்திரமடையச் செய்து வருகிறது.