மகாராஷ்டிர மாநிலம் அம்பர்நாத் நகராட்சியின் பொதுக்குழு கூட்டத்தின் போது, ஆளும் ‘மகாஜியுதி’  கூட்டணியைச் சேர்ந்த நகராட்சி உபநகரத்தலைவர் சதாசிவ் பாட்டீல், ஊழலுக்கு பகிரங்கமாக ஆதரவு தெரிவித்துப் பேசியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. நகராட்சி சபை நடந்துகொண்டிருந்த போது, கேள்வி ஒன்றிற்கு பதிலளித்த சதாசிவ் பாட்டீல் தனது நிதானத்தை இழந்து, “ஊழலும் திருட்டும் கண்டிப்பாக நடக்க வேண்டும்; ஆனால் அதன் கமிஷன் சதவீதம் குறைவாக இருக்க வேண்டும். ஊழல் இருக்க வேண்டும், ஆனால் அது அளவுக்கு அதிகமாக இருக்கக் கூடாது. என்னுடைய இந்த கருத்தில் உங்களுக்கு உடன்பாடு இல்லையா?” என பத்திரிகையாளர்கள் முன்னிலையிலேயே பெஞ்சை தட்டிப் பேசினார்.

இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அவருக்கு அருகில் அமர்ந்திருந்த நகராட்சித் தலைவி தேஜஸ்ரீ கரஞ்சுலே, ஹதாஷாக தனது தலையில் கைவைத்துக் கொண்டார். “முன்னால் செய்தியாளர்கள் இருக்கிறார்கள், அமைதியாக இருங்கள்” என அவர் பலமுறை எச்சரித்தும் கேட்காத பாட்டீல், “நான் என்ன தப்பாக பேசிவிட்டேன்?” எனத் திருப்பி வாதிட்ட வீடியோ தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி கடும் விமர்சனங்களை எழுப்பியுள்ளது.

பொதுமக்களின் வரிப்பணத்தை பகிரங்கமாக கொள்ளையடிக்கச் சொல்லும் இந்த உபநகரத்தலைவர் மீது அரசு என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக சமூக ஆர்வலர் விஜய் கும்பாஹர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ஊழலை எதிர்ப்பதற்குப் பதிலாக, அதற்கு ‘அளவுகோல்’ நிர்ணயம் செய்யும் நபர்கள் எவரும் மக்கள் பிரதிநிதியாக இருக்க தகுதியற்றவர்கள் என அவர் சாடியுள்ளார்.

இதேபோல், இச்சம்பவம் குறித்து மகாஜியுதி கூட்டணியை வறுத்தெடுத்துள்ள எம்பி வர்ஷா ஊழல் செய்யுங்கள்.. ஆனால் கமிஷனை மட்டும் குறைவாக வாங்குங்கள் என்பதுதான் மகாஜியுதியின் புதிய ஃபண்டாவா? ராமர் கோயிலின் உண்டியலையே திருட முற்படும்போது, நகராட்சிப் பணிகளில் ஊழல் நடப்பதில் என்ன ஆச்சரியம் இருக்கிறது? உண்மையை தைரியமாக ஒப்புக்கொண்ட பாட்டீலுக்கு எனது பாராட்டுகள்! மக்கள் தேர்ந்தெடுத்த பிறகு கவுன்சிலர்களின் வயிற்றுப் பிழைப்புக்கும் வழி செய்ய வேண்டும் அல்லவா? தெரு முதல் டெல்லி வரை திருட்டு நடக்கும்போது இவர்கள் மட்டும் ஏன் சும்மா இருக்க வேண்டும்; அதனால் ‘சாப்பிடுங்கள்.. ஆனால் கொஞ்சம் கம்மியாக சாப்பிடுங்கள்’ என்றுதான் பாட்டீல் அறிவுரை வழங்கியுள்ளார்” என மிகக் காரசாரமாகத் தனது அரசியல் விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.