இந்தியாவில் 20% எத்தனால் கலக்கப்பட்ட ‘E20 பெட்ரோல்’ பயன்பாடு வாகனங்களைப் பாதிப்பதாகப் புகார்கள் எழுந்துள்ள நிலையில், இந்திய பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் வழங்க முன்வந்த E20 பெட்ரோல் இறக்குமதியை அண்டை நாடான பூட்டான் திட்டவட்டமாக மறுத்துள்ளது.

இந்திய எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனங்களான (OMCs) ஐஓசிஎல் (IOCL), பிபிசிஎல் (BPCL) மற்றும் ஹெச்பிசிஎல் (HPCL) ஆகியவை பூட்டானுக்கு இந்த எரிபொருளை வழங்க முன்மொழிந்தன.

எனினும், எத்தனால் எரிபொருளானது காற்றில் உள்ள ஈரப்பதத்தை எளிதில் உறிஞ்சும் ‘ஹைக்ரோஸ்கோபிக்’ (-OH ஹைட்ராக்சில் தொகுதி) தன்மையைக் கொண்டது என்பதால், நிலத்தடி நீர் கசிவு அதிகம் உள்ள பூட்டானின் மலைப்பகுதி சேமிப்புக் கிடங்குகளில் இதைச் சேமித்தால் எரிபொருளின் தரம் முழுமையாகப் பாதிக்கப்பட்டு வாகனங்களின் எஞ்சின்கள் பழுதடையும் என பூட்டான் வர்த்தகத் துறை சுட்டிக்காட்டியுள்ளது.

எனவே, இந்தியாவில் வழக்கமான சுத்தமான பெட்ரோல் (Generic MS) கிடைக்கும் வரை அதையே தங்களுக்குத் தொடர்ந்து வழங்க வேண்டும் என்றும், எதிர்காலத்தில் எத்தனால் எரிபொருளுக்கு மாற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால் தங்களது சேமிப்புக் கிடங்குகளை மேம்படுத்த ஏதுவாக முன்கூட்டியே அதிகாரப்பூர்வ அறிவிப்பை வழங்க வேண்டும் என்றும் பூட்டான் இந்தியத் தரப்பிடம் திட்டவட்டமாகக் கோரியுள்ளது.