மாம்பழம் என்பது வெறும் பழம் மட்டுமல்ல, அது ஒரு அலாதியான உணர்வு என்று சொல்வார்கள். மால்டா, லங்டா என அதன் ரகங்களுக்குத் தனித்தனி ரசிகர் பட்டாளமே உண்டு. அப்படியான இரண்டு பெட்டி மாம்பழங்களுக்காக, பீகாரில் இருந்து உத்தரப் பிரதேசம் வரை மூன்று ரயில்வே கோட்டங்கள் விடிய விடியத் தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட சுவாரசியமான சம்பவம் தற்பொழுது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
புதன்கிழமை நள்ளிரவு, பரவுனி – குவாலியர் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்த பெண் பயணி ஒருவர், முசாபர்பூர் ரயில் நிலையத்தில் அவசர அவசரமாக இறங்கியுள்ளார். வீட்டிற்குச் சென்ற பிறகுதான், தான் பயணித்த பெட்டியிலேயே இரண்டு பெட்டி மாம்பழங்களையும், ஒரு பையையும் தவறவிட்ட செய்தி அவருக்கு நினைவுக்கு வந்துள்ளது. பதற்றமடைந்த அவர், உடனடியாக ரயில்வேயின் ‘ரயில் மதாத்’ செயலியில் இதுகுறித்து புகார் ஒன்றை அளித்துள்ளார்.
புகார் பதிவான அடுத்த கணமே ஒட்டுமொத்த ரயில்வே நிர்வாகமும் அதிரடியாகக் களமிறங்கியது. சோன்பூர் ரயில்வே கோட்டம் உடனடியாக வாரணாசி மற்றும் ஜான்சி ரயில்வே கோட்டங்களுக்குத் தகவல் அனுப்ப, ஆர்.பி.எப் போலீசாரும் ரயில்வே அதிகாரிகளும் ‘மிஷன் மேங்கோ’ என்ற பெயரில் தேடுதல் வேட்டையைத் தொடங்கினர். நள்ளிரவு 12 மணி முதல் காலை 6 மணி வரை அந்த ரயில் நின்ற அனைத்து நிலையங்களிலும் எஸ்-4 பெட்டி அங்குலம் அங்குலமாகச் சோதிக்கப்பட்டது.
ஆனால், 6 மணி நேரத் தீவிர முயற்சிக்குப் பிறகு, சிவான் ஆர்.பி.எப் உள்ளிட்ட எந்தக் குழுவாலும் அந்த மாம்பழப் பெட்டிகளைக் கண்டுபிடிக்க முடியவில்லை என வாரணாசி கோட்டம் அறிவித்ததைத் தொடர்ந்து இந்த ஆபரேஷன் முடிவுக்கு வந்தது. மாம்பழங்கள் கிடைக்கவில்லை என்றாலும், ஒரு பயணியின் சாதாரணப் புகாருக்காக நள்ளிரவிலும் மூன்று கோட்ட அதிகாரிகள் காட்டிய வேகம் மற்றும் கடமையுணர்வைச் சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் வெகுவாகப் பாராட்டி வருகின்றனர்.
