தமிழகத்தில் தவெக ஆட்சியில் அரசு வேலை நியமனங்களில் மிகப்பெரிய அளவில் முறைகேடுகளும் லஞ்ச ஊழல்களும் நடந்து வருவதாகத் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் மிகக் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி அரசு வேலைகளைக் கோடி கோடியாக விலை பேசுவோர் மீது அரசு உடனடியாகக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

தற்போதைய அரசில் லஞ்சத்தின் அடிப்படையில்தான் அரசு வழக்கறிஞர்கள் நியமிக்கப்படுகிறார்கள் என்று தவெகவின் சொந்தக் கட்சி வழக்கறிஞர்களே புகார் எழுப்பியுள்ள விவகாரத்தை நயினார் நாகேந்திரன் தற்பொழுது ஓப்பனாக அம்பலப்படுத்தியுள்ளார்.

​மேலும், உதவிப் பேராசிரியர் நியமனத்தில் நடந்துள்ள தில்லுமுல்லுகளைச் சுட்டிக்காட்டிய அவர், 2006-ல் பிறந்த மிகக் குறைந்த வயதுடைய ஒருவருக்கும், தகுதிப் பட்டியலில் பெயரே இல்லாத மற்றொரு நபருக்கும் அரசு வேலை வழங்கப்பட்டுள்ளதாகப் பகீர் குற்றச்சாட்டை எழுப்பியுள்ளார்.

அரசு வேலைகளைத் தங்கள் இஷ்டப்படி ஆட்டிப்படைக்கும் ஆளுங்கட்சியின் இந்த ஆணவம் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என்றும், தவெக ஆட்சியில் தற்பொழுது அரங்கேறி வரும் இந்த அத்தனை ஊழல் மற்றும் முறைகேடுகள் குறித்து முதலமைச்சர் விஜய் உடனடியாகத் தலையிட்டு நேர்மையான விசாரணை நடத்த வேண்டும் என்றும் நயினார் நாகேந்திரன் மிகக் காரசாரமாகக் கேட்டுக்கொண்டுள்ளார்.