பீகார் மாநிலம் நவாதா சதர் (Nawada Sadar Hospital) அரசு மருத்துவமனையில், 24 மணி நேரப் பாதுகாப்புப் பணியாளர்கள் மற்றும் சிசிடிவி கேமராக்கள் கண்காணிப்பு இருந்தபோதிலும், இரத்தச் சோகையால் தவித்த ஒரு கர்ப்பிணிப் பெண்ணைத் தரகர்கள் சிலர் கட்டாயப்படுத்தித் தனியார் கிளினிக்கிற்கு மாற்ற முயன்ற சம்பவம் உள்ளூர் மக்களிடையேயும் சமூக வலைத்தளங்களிலும் பெரும் அதிர்ச்சியையும் கண்டனங்களையும் கிளப்பியுள்ளது.
கோவிந்த்பூர் பகுதியைச் சேர்ந்த அந்தப் பெண்ணுக்கு இரத்தம் செலுத்துவதற்காக அவரது குடும்பத்தினர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்திருந்தனர். உறவினர்கள் மருத்துவர்களைச் சந்திக்கச் சென்ற அந்தச் சிறிய இடைவெளியைப் பயன்படுத்திக் கொண்ட தரகர்கள், தங்களுக்குள் 16,000 ரூபாய்க்குப் பேசி முடித்துக் கொண்டு, அந்தப் பெண்ணுக்குப் பிரைவேட் கிளினிக்கில் நல்ல சிகிச்சை வாங்கித் தருவதாக ஆசை வார்த்தை கூறி வார்டை விட்டு வெளியே கடத்திச் சென்றுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, அந்தப் பெண்ணின் மாற்றுத்திறனாளி கணவர் தனது மனைவியைக் காணாமல் தேடி அலைந்தபோது, உள்ளூர் மக்கள் கொடுத்த தகவலின்படி ஒரு பெண் தரகர் தனது மனைவியை அழைத்துச் செல்வதை அறிந்து, உடனடியாகத் துரத்திச் சென்று அந்தப் பெண் தரகரைப் பிடித்துள்ளார்.
அங்கே மக்கள் கூடிப் பரபரப்பு ஏற்பட்டதாலும், சட்டப்பூர்வ நடவடிக்கை வந்துவிடும் என்ற பயத்தினாலும், அந்தப் பெண் தரகர் கர்ப்பிணிப் பெண்ணை நடுரோட்டிலேயே தவிக்கவிட்டு விட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளார். அதன் பின்னர், பாதிக்கப்பட்ட அந்தப் பெண் தட்டுத்தடுமாறி தனியாகவே நடந்து மீண்டும் அரசு மருத்துவமனைக்கு வந்து தற்பொழுது மறுபடியும் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்தத் துயரச் சம்பவம் ஒட்டுமொத்த மருத்துவமனை நிர்வாகத்தின் பாதுகாப்புக் குறைபாட்டைப் பொதுவெளியில் வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளதுடன், இவ்வளவு கண்காணிப்புகளையும் மீறி மருத்துவமனை வளாகத்திற்குள் தரகர்கள் எப்படி இவ்வளவு பயமின்றி உலவுகிறார்கள் என்றும், அவர்கள் மீது ஏன் இன்னும் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்றும் சமூக வலைத்தளங்களில் பொதுமக்கள் தங்களது ஆதங்கக் கமெண்ட்டுகளுடன் இந்த நியூஸைத் தீவிரமாக விவாதித்து வருகின்றனர்.
