தமிழகத்தில் தற்போதைய ஆட்சி கவிழ்ப்பு சதி மற்றும் குதிரை பேரம் தொடர்பாக எழுந்துள்ள புகார்கள் குறித்து, சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக முன்னாள் எம்.எல்.ஏ பரந்தாமன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேட்டி அளித்தார். அப்போது தவெக அரசுக்கு எதிராகப் பல்வேறு கடுமையான குற்றச்சாட்டுகளை அவர் முன்வைத்தார். “தமிழகத்தில் தற்போது நடந்து கொண்டிருப்பது ஒரு மைனாரிட்டி அரசு. தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) விஜய் தலைமையிலான அரசு, எந்த நேரத்திலும் கவிழக்கூடிய மிக பலவீனமான நிலையில்தான் தள்ளாடி வருகிறது. தவெக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா எதிர்க்கட்சிகள் மீது வீண் பழி சுமத்துகிறார். ஆனால், உண்மையில் தமிழ்நாட்டில் அதிகாரப்பூர்வமாகக் குதிரை பேரத்தை நடத்திக் கொண்டிருப்பதே இந்த தவெக அரசுதான்.

தொடர்ந்து தவெக அரசின் குதிரை பேரப் பின்னணிகளைப் பட்டியலிட்ட பரந்தாமன், “அமமுக சட்டமன்ற உறுப்பினரைத் தங்களது பக்க இழுப்பதற்காகக் குதிரை பேரத்தில் ஈடுபட்டது தவெக தான். இது தொடர்பாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அன்று அளித்த புகார் மீது இதுவரை என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? அது என்ன ஆனது? அதேபோல், கடந்த சட்டமன்ற வாக்கெடுப்பின் போது அதிமுகவைச் சேர்ந்த 25 சட்டமன்ற உறுப்பினர்கள் திடீரென கட்சி மாறி விஜய் அரசுக்கு ஆதரவாக ஏன் வாக்களித்தார்கள்? அதற்குப் பின்னால் என்ன நடந்தது? இதற்கெல்லாம் தவெக அரசிடம் பதில் இருக்கிறதா?” என்று அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினார். தவெக அரசு கவிழும் நிலையில் இருப்பதாக திமுக முன்வைத்துள்ள இந்தக் குற்றச்சாட்டு, தமிழக அரசியல் களத்தில் விவாதங்களை மேலும் சூடாக்கியுள்ளது.