அயர்லாந்து அணிக்கு எதிரான டி20 தொடரை 0-2 என இழந்த வலியோடு, இங்கிலாந்து மண்ணில் கால் பதித்துள்ள இந்திய கிரிக்கெட் அணி இன்று செஸ்டர்-லே-ஸ்டிரீட் மைதானத்தில் தனது முதல் டி20 போட்டியில் விளையாடுகிறது. இந்தத் தொடருக்கான இந்திய அணியில் 15 வயது இளம் அதிரடி வீரர் வைபவ் சூர்யவன்ஷி சேர்க்கப்பட்டுள்ளது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

அயர்லாந்து தொடரில் இவருக்கு விளையாட வாய்ப்பு கிடைக்காத நிலையில், இங்கிலாந்துக்கு எதிரான இன்றைய போட்டிக்கு முன்பாக நடந்த வலைப்பயிற்சியில் வைபவ் சூர்யவன்ஷி மிகக் கடுமையான பயிற்சியில் ஈடுபட்டார். இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர்களான அர்ஷ்தீப் சிங், பிரசித் கிருஷ்ணா மற்றும் ஹர்ஷித் ராணா ஆகியோரின் பந்துவீச்சை சற்றும் பயமின்றி எதிர்கொண்டு அவர் பேட்டிங் செய்தார்.

இந்த வலைப்பயிற்சியின் போது வேகப்பந்து வீச்சாளர் ஹர்ஷித் ராணா வீசிய பந்தை வைபவ் மிக ஆக்ரோஷமாக எதிர்கொண்டார். குறிப்பாக, அவர் அடித்த ஒரு ‘ஸ்ட்ரெய்ட் டிரைவ்’ ஷாட் பார்ப்போரைக் கவரும் வகையில் இருந்தது. இதன் காரணமாக, கடுப்பான ஹர்ஷித் ராணாவுக்கும் 15 வயதே ஆன வைபவ்விற்கும் இடையே மைதானத்திலேயே கடுமையான வார்த்தை மோதல் ஏற்பட்டது. சூர்யவன்ஷி அடித்த ஒரு ஷாட் டைமிங் தவறிய போது, ஹர்ஷித் ராணா அவரிடம் சென்று சில கடுமையான வார்த்தைகளைக் கூற, அதற்கு அந்தச் சிறுவனும் சளைக்காமல் பதிலடி கொடுத்த வீடியோ தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.

இதற்கிடையே, சமீபத்தில் இலங்கை ஏ அணிக்கு எதிராக 29 பந்துகளில் 94 ரன்கள் குவித்து மிரட்டிய வைபவ், இன்றைய போட்டியில் விளையாடுவாரா என்ற கேள்விக்குக் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் முற்றுப்புள்ளி வைத்துள்ளார். செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய ஸ்ரேயாஸ், “உலகக்கோப்பை தொடரில் சிறப்பாக விளையாடிய வீரர்களுக்குத் தொடர்ந்து முன்னுரிமை அளித்து ஆதரவு தருவதே இப்போதைய நோக்கம்” என்று கூறியுள்ளார். இதனால், இன்றைய போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரர்களில் மாற்றம் இருக்காது என்றும், வைபவ் சூர்யவன்ஷி ஆடும் லெவனில் இடம் பெறுவது கடினம் என்றும் தெரியவந்துள்ளது.