“போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி நான் யாரிடமும் ஒரு ரூபாய் கூட பணம் வாங்கவில்லை” என்று திமுக முன்னாள் அமைச்சர் சிவசங்கர் செய்தியாளர்களிடம் அதிரடியாகத் தெரிவித்துள்ளார். சென்னை வேப்பேரியில் உள்ள மத்திய குற்றப்பிரிவு (CCB) போலீஸ் அலுவலகத்தில் வேலைவாய்ப்பு மோசடி வழக்கு தொடர்பாக இன்று நேரில் ஆஜராகி விளக்கம் அளித்த அவர், விசாரணைக்கு ஆஜராகுமாறு காவல் துறை தரப்பில் அழைப்பு விடுக்கப்பட்டதாலேயே ஒரு பொறுப்புள்ள குடிமகனாக இங்கு வந்ததாகக் குறிப்பிட்டார்.
மேலும் பேசிய முன்னாள் அமைச்சர் சிவசங்கர், “இந்த வழக்கில் கூறப்படும் இளஞ்செழியன் என்ற நபருக்கும், எனக்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை; அவரோடு எனக்கு எந்த தொடர்பும் கிடையாது” என்று திட்டவட்டமாக மறுத்தார். மேலும், இந்த வழக்கில் தன் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை என்பதை நிரூபிக்க, காவல் துறை நடத்தும் எந்தவொரு ‘குரல் பரிசோதனைக்கும்’ (Voice Test) தான் முழுமையாகத் தயாராக இருப்பதாக போலீசாருக்கு ஓப்பன் சேலஞ்ச் விடுத்தார். விசாரணை முடிந்து வெளியே வந்த முன்னாள் அமைச்சரின் இந்த பரபரப்பு பேட்டி அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
