தமிழ் இலக்கிய உலகிலும், கவிதை வானிலும் தனக்கெனத் தனி முத்திரை பதித்த ‘வானம்பாடி’ கவிதை இயக்கத்தின் முன்னோடியான கவிஞர் புவியரசு (96), வயது மூப்பு காரணமாக நேற்று காலமானார். அவரது மறைவுச் செய்தி தமிழ் நெஞ்சங்களை உலுக்கியுள்ள நிலையில், அவரது இறுதிச் சடங்கு இன்று பெரியநாயக்கன்பாளையத்தில் நடைபெறுகிறது. கவிஞர் புவியரசுவின் மறைவுக்குத் தமிழ் அறிஞர்கள், எழுத்தாளர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் எனப் பல்வேறு தரப்பினரும் தங்களது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர். சமூகப் பொறுப்பைத் தனது கவிதைகள் மூலம் உரக்கச் சொன்னவர் புவியரசு. உலக இலக்கியச் செல்வங்களைத் தமிழுக்குக் கொண்டு வந்த பெருமை இவருக்கு உண்டு.
கவிஞர் புவியரசு தமிழ் இலக்கிய உலகிற்கு ஆற்றிய பங்களிப்பு அளப்பரியது. இவரது ‘கையொப்பம்’ என்ற கவிதைத் தொகுப்பிற்காக தமிழுக்கான சாகித்ய அகாதமி விருதும், புகழ்பெற்ற ’புரட்சிக்காரன்’ என்ற மொழிபெயர்ப்பு நூலிற்காக மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகாதமி விருதும் என இருமுறை சாகித்ய அகாடமி விருதுகளைப் பெற்றுத் தமிழ் மொழிக்குக் பெருமை சேர்த்தவர்.
இவரது மறைவு குறித்து வெளியாகியுள்ள அதிகாரப்பூர்வ இரங்கல் செய்தியில், “கவிஞர் புவியரசின் மறைவு தமிழ் இலக்கிய உலகிற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். அவரது மறைவால் வாடும் குடும்பத்தினர் மற்றும் தமிழ் இலக்கிய உலகிற்கு ஆழ்ந்த இரங்கல். இலக்கியத் துறையில் அவரது பங்களிப்பைப் போற்றி அஞ்சலி செலுத்தும் வகையில், அவரது இறுதிப் பயணத்திற்கு அரசு மரியாதை வழங்கப்படும்” என அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு சகாப்தமாக வாழ்ந்து மறைந்த கவிஞரின் இறுதிப் பயணம் இன்று முழு அரசு மரியாதையுடன் நடைபெறவிருப்பது குறிப்பிடத்தக்கது.
