அமெரிக்காவின் மியாமி நகரில் உள்ள ஹார்ட் ராக் மைதானத்தில் நடைபெற்ற பிஃபா உலகக் கோப்பை 2026 தொடரின் போர்ச்சுகல் மற்றும் கொலம்பியா அணிகளுக்கு இடையிலான லீக் போட்டியின் போது, அர்ஜென்டினாவைச் சேர்ந்த பிரபல யூடியூபர்களான பெனி மார்மோல் மற்றும் பாட்டோ பெரோட்டா ஆகிய இருவரும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் இருவரும் தங்களுக்குரிய முறையான அனுமதிச் சீட்டுகள் இல்லாமல், கடந்த போட்டிகளின் போது பயன்படுத்தப்பட்ட காலாவதியான பழைய ஊடக அடையாள அட்டைகளை வைத்துக்கொண்டு, மைதானத்தின் மூன்று அடுக்கு பாதுகாப்பையும் மீறி சட்டவிரோதமாக உள்ளே நுழைந்துள்ளனர்.
🚨 DETUVIERON A DOS YOUTUBERS ARGENTINOS EN MIAMI
Beni Mármol y Pato Perrotta fueron arrestados por ingresar al partido entre Colombia y Portugal con credenciales vencidas y, según la Policía, eludir tres controles de seguridad. Enfrentan cargos y quedaron bajo fianza de… pic.twitter.com/POXle9XAE0
— Keops FM 90.1 | Cadena 3 La Plata (@KeopsFM) June 28, 2026
மைதானத்தின் உள்ளே சென்று போட்டியை நேரலை செய்யவும், சமூக வலைத்தளங்களில் பதிவிடவும் திட்டமிட்டிருந்த இவர்களை, மைதான அதிகாரிகள் சந்தேகத்தின் அடிப்படையில் பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர். விளையாட்டுப் போட்டிகளுக்கு இடையூறு விளைவித்தல் மற்றும் அனுமதியின்றி நுழைதல் ஆகிய பிரிவுகளின் கீழ் மியாமி போலீசார் இவர்கள் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட இவர்களுக்கு தலா 2,500 டாலர் பிணைத் தொகையாக நிர்ணயிக்கப்பட்டதை அடுத்து, இவர்களின் மேலாளர் வால்டர் கோஸ்டாபெல் பிணைத் தொகையைச் செலுத்தி இவர்களை மீட்டுள்ளார்.
இருப்பினும், அமெரிக்கச் சட்டத்தின்படி இந்த குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் இவர்களுக்கு அதிகபட்சமாக 5 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது 5,000 டாலர் அபராதம் விதிக்கப்பட வாய்ப்புள்ளது. தற்சமயம் இவர்கள் இருவரும் ஜாமீனில் வெளிவந்திருந்தாலும், உலகக் கோப்பை போட்டிகள் நடக்கும் எந்தவொரு மைதானத்தின் அருகிலும் செல்லக்கூடாது என்று நீதிமன்றம் கடுமையான நிபந்தனை விதித்துள்ளது. பல லட்சம் சந்தாதாரர்களைக் கொண்ட இந்த யூடியூபர்கள் கைதான சம்பவம் இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
