ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன் நகரில் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த 5 வயது சிறுமி சாய் தீப்தி மாயமாகி, பின்னர் பக்கத்து வீட்டு கிணற்றில் சடலமாக மீட்கப்பட்ட வழக்கில் தற்போது மிக அதிர்ச்சிகரமான திருப்பம் ஏற்பட்டுள்ளது. இந்த கொடூரக் கொலை சம்பவம் தொடர்பாக, சிறுமியின் தாய்மாமனின் மனைவியான சபரிகா (21) என்பவரை காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். தன் சொந்த குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரே, 5 வயதுக் குழந்தையைக் கிணற்றில் வீசிக் கொலை செய்துள்ளார் என்ற தகவல் வெளியாகி ஒட்டுமொத்த தமிழகத்தையும் உறைந்துபோகச் செய்துள்ளது.
காவல்துறையினரின் தீவிர விசாரணையில், சபரிகா கொலைக்கான காரணத்தை வாக்குமூலமாகத் தெரிவித்துள்ளார். சபரிகாவின் மகனுக்குப் பிறந்த குழந்தை மாற்றுத்திறனாளியாக இருந்த நிலையில், மாமனாரும் மாமியாரும் மகள் வயிற்றுக் குழந்தையான சாய் தீப்தி மீது அதிக பாசம் காட்டியுள்ளனர். மேலும், சாய் தீப்தியின் காதணி விழாவிற்கு நிறையச் செய்ய வேண்டும் என்றும் அவர்கள் தங்களுக்குள் பேசிக்கொண்டுள்ளனர்.
இதனால் ஏற்பட்ட கடுமையான பொறாமை மற்றும் ஆத்திரத்தின் காரணமாகவே, நள்ளிரவில் தூங்கிக்கொண்டிருந்த சிறுமியைத் தூக்கிச் சென்று கிணற்றில் வீசிக் கொலை செய்ததாக சபரிகா ஒப்புக்கொண்டுள்ளார். இந்த விவகாரத்தில் உண்மை குற்றவாளிகளைக் கைது செய்யக் கோரி பிரேமலதா விஜயகாந்த் அறிக்கை வெளியிட்டிருந்த நிலையில், தற்போது இந்த கொடூரக் கொலைக்கான பின்னணி அம்பலமாகியுள்ளது.
