திருப்பூர் அருகே யூடியூப் வீடியோக்களைப் பார்த்து வீட்டின் உள்ளேயே பிரசவம் பார்த்ததில் சசிகலா என்ற பெண் பரிதாபமாக உயிரிழந்த விவகாரம் ஒட்டுமொத்த தமிழகத்தையும் உலுக்கியுள்ளது. ஊத்துக்குளி அருகே உள்ள தளவாய்பாளையத்தில் கடந்த 24ஆம் தேதி இந்த நெஞ்சை பதறவைக்கும் கொடூரம் நடந்துள்ளது. உரிய மருத்துவ வசதி இல்லாமல், போதிய விழிப்புணர்வும் இன்றி வீட்டிலேயே பிரசவம் பார்த்ததால் சசிகலாவுக்கு அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டு, சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

​இந்த விபரீத சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர், உயிரிழந்த சசிகலாவின் கணவர் கார்த்திக் மீது தற்போது 2 பிரிவுகளின் கீழ் அதிரடியாக வழக்குப் பதிவு செய்துள்ளனர். கொலையாகாத மரணம் விளைவித்தல் மற்றும் மனைவியின் கருவுற்ற நிலையை வெளியே சொல்லாமல் மறைத்து தனிப்பட்ட முறையில் பிரசவம் பார்த்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் இந்த எஃப்.ஐ.ஆர் பாய்ந்துள்ளது. நவீன மருத்துவ வசதிகள் உள்ள இந்த காலத்திலும், யூடியூபைப் பார்த்து ஆபத்தான முறையில் பிரசவம் பார்த்து ஒரு உயிரைப் பறித்த கணவர் மீது காவல்துறை எடுத்துள்ள இந்த ஆக்ஷன் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.