குஜராத் மாநிலத்தை சேர்ந்த ஒரு கிராமத்தில், கடந்த 8 ஆண்டுகளாக லிவ்-இன் ரிலேஷன்ஷிப்பில் சேர்ந்து வாழ்ந்து வந்த ராஜரதன் என்ற ராஜுபாய் மற்றும் மனிஷாபென் ஆகிய தம்பதியிடையே ஏற்பட்ட குடும்பத் தகராறு கொலையில் முடிந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இறந்த ராஜுபாய்க்கு நிரந்தர வேலை இல்லாததால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக இருவருக்கும் இடையே தினமும் சண்டை சச்சரவுகளும், அடிதடிகளும் ஏற்பட்டு வந்த நிலையில், கடந்த ஜூன் 23-ஆம் தேதி மாலையில் ராஜுபாய் தனது மனிஷாவை ஓட ஓட விரட்டி அடித்து, கொலை செய்துவிடுவதாக மிரட்டியுள்ளார்.
இதனால் தற்காப்புக்காகப் பாத்திரம் கழுவும் இடத்திற்கு ஓடிய மனிஷா, அங்கு கிடந்த உருளைக்கிழங்கு தோல் சீவும் சிறிய கத்தியை எடுத்து ராஜுபாயைக் குத்தியதில் அவர் அதிக இரத்தப்போக்கு ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார்.
ஆரம்பத்தில் இது சாதாரண விபத்து மரணம் என்று கருதப்பட்டாலும், காவல்துறையினரின் தீவிர விசாரணை மற்றும் தடயவியல் பிரேதப் பரிசோதனை அறிக்கையில் இது கொடூரக் கொலை என்பது உறுதி செய்யப்பட்டதை அடுத்து, மனிஷாபென் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டதால் போலீஸார் வழக்கைக் கொலை வழக்காக மாற்றி அவரை அதிரடியாகக் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
