திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே உள்ள தனியார் இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் ஏற்பட்ட அம்மோனியா வாயு கசிவு காரணமாக 9 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் ஒட்டுமொத்த தமிழகத்தையும் உலுக்கியுள்ளது. இந்த கோர விபத்து குறித்து முழுமையாக விசாரணை நடத்த தமிழக அரசால் அமைக்கப்பட்ட 3 நபர் கொண்ட சிறப்பு விசாரணைக் குழு, தற்போது முதலமைச்சர் விஜயிடம் தனது முதல் கட்ட இடைக்கால அறிக்கையைத் தாக்கல் செய்துள்ளது.
தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்குநர், மாசுக் கட்டுப்பாட்டு வாரிய உறுப்பினர் செயலர் மற்றும் பொது சுகாதாரத்துறை கூடுதல் இயக்குநர் ஆகியோர் அடங்கிய இந்தக் குழு, விபத்துக்கான காரணம் மற்றும் தொழிற்சாலையின் பாதுகாப்பு குறைபாடுகள் குறித்த அதிர்ச்சியளிக்கும் தகவல்களை இந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாகத் தெரிகிறது. அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட தொழிற்சாலை நிர்வாகத்தின் மீதும், பாதுகாப்பு விதிமீறல்கள் குறித்தும் தமிழக அரசு தரப்பில் கடுமையான அதிரடி நடவடிக்கைகள் பாயும் என எதிர்பார்க்கப்படுகிறது.
