ஒடிசா மாநிலம் ஜாஜ்பூர் மாவட்டத்தில், மழைக் கடவுளைக் குளிர்வித்து கோடை வறட்சியைப் போக்குவதற்காக இரு ஆண்களுக்கு இடையே பாரம்பரிய முறைப்படி அடையாளத் திருமணம் நடத்தி வைக்கப்பட்ட விசித்திர சம்பவம் அரங்கேறியுள்ளது. ஜாஜ்பூர் மாவட்டம் கம்ஹாமியா கிராமத்தில், நீண்ட நாட்களாகப் பருவமழை பொழியாமல் வறட்சி நிலவி வந்தது. இதனால் கவலையடைந்த கிராம மக்கள், தங்களின் பயிர்களைக் காப்பாற்றவும், நல்ல மழைப் பொழிவை வேண்டி ‘அண்டிரா பிபாஹா’  என்ற தங்களின் பாரம்பரிய சடங்கினை நடத்த முடிவு செய்தனர்.

இதன்படி கடந்த ஜூன் 17-ஆம் தேதி மாலை, ஜதின் கதுவா என்ற இளைஞர் பாரம்பரிய மணமகன் உடையில், மலர்களால் அலங்கரிக்கப்பட்ட காரில் டிஜே இசையுடன் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டார். இந்த ஊர்வலம் அங்குள்ள சித்தேஸ்வரி கோயிலை வந்தடைந்ததும், அங்கு மணமகள் உடையில் அலங்கரித்து தயாராகக் காத்திருந்த காலாந்தி நாயக் என்ற மற்றொரு இளைஞரை அவர் முறைப்படி திருமணம் செய்து கொண்டார்.

வேத மந்திரங்கள் முழங்க, இந்து மதச் சடங்குகளின்படி லட்சுமண் கதுவா மணமகனின் தந்தையாகவும், மனகோவிந்த நாயக் மணமகளின் தந்தையாகவும் இருந்து இந்தத் திருமணத்தை நடத்தி வைத்தனர். உள்ளூர் பஞ்சாயத்துத் தலைவர் விஷ்ணு சரண் ரத் தலைமையில் ஒருங்கிணைக்கப்பட்ட இத்திருமணத்திற்குப் பின், மணமகளுக்குப் பாரம்பரிய முறைப்படி விடைவொடுப்பு கொடுக்கப்பட்டு, கோயில் அருகே ஊர் பொது விருந்தும் நடைபெற்றது. இச்சடங்கு தங்களுக்கு நல்ல மழையைத் தரும் என்று கிராம மக்கள் தீர்க்கமாக நம்புகின்றனர்.