தேசிய தேர்வு முகமை (NTA) நடத்திய நீட் மறுதேர்வு மைய ஒதுக்கீட்டில் ஏற்பட்டுள்ள குளறுபடி குறித்து மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரைச் சேர்ந்த ஒரு மாணவனின் நிலையை சுட்டிக்காட்டி தனது கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார். ஒரு மாத காலமாக நீட் மறுதேர்வுக்குத் தயாராகி வந்த அந்த மாணவனுக்கு, தேர்வு நடப்பதற்கு ஒரு நாள் முன்பாக அபுதாபியில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியளிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தன்னிடம் கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்) இல்லாததாலும், வெளிநாடு செல்ல குடும்பத்தினரிடம் வசதி இல்லாததாலும் மன உளைச்சலுக்கு ஆளான அந்த மாணவன், தேர்வு எழுத மறுத்து இரவு முழுவதும் அழுதுள்ளான் என்று ராகுல் காந்தி தனது சமூக வலைதளப் பக்கத்தில் வேதனை தெரிவித்துள்ளார். தன் சொந்த நாட்டில் உள்ள ஒரு குழந்தைக்கு அவனது சொந்த நகரத்திலேயே தேர்வு மையத்தை ஒதுக்க முடியாத ஒரு அமைப்புக்கு, தேர்வுகளை நடத்த எந்தவித உரிமையும் இல்லை என்று NTA அமைப்பை ராகுல் காந்தி மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார்.
नागपुर का एक बच्चा एक महीने से NEET re-exam की तैयारी कर रहा था।
कल परीक्षा से ठीक एक दिन पहले उसने admit card डाउनलोड किया। उसका सेंटर निकला – अबू धाबी।
न पासपोर्ट, न परिवार के पास विदेश भेजने के पैसे, न अब कोई वक़्त बचा है। वो रातभर रोता रहा, और परीक्षा देने से ही मना कर रहा… https://t.co/TJOHUBnFDB
— Rahul Gandhi (@RahulGandhi) June 20, 2026
நமது குழந்தைகளின் எதிர்காலத்துடன் சூதாடுவதை நிறுத்திவிட்டு, அவர்களுக்குப் பொறுப்பான மற்றும் பொறுப்புக்கூறக்கூடிய கல்வி முறையை வழங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். ராகுல் காந்தியின் இந்த கடுமையான விமர்சனப் பதிவைத் தொடர்ந்து உடனடியாகப் பதிலளித்துள்ள தேசிய தேர்வு முகமை (NTA), இந்த விவகாரத்தில் உரிய விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், அடுத்த சில மணி நேரத்திற்குள் அந்த மாணவருக்கு நாக்பூரிலேயே புதிய தேர்வு மையம் ஒதுக்கப்படும் என்றும் உறுதியளித்துள்ளது. இந்தியாவில் வினாத்தாள் கசிவு காரணமாக ஜூன் 21-ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்ட நீட் மறுதேர்வில் மீண்டும் இதுபோன்ற குளறுபடிகள் அரங்கேறியிருப்பது மாணவர்களிடையே பெரும் குழப்பத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
