திமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரும் முன்னாள் அமைச்சருமான மனோ தங்கராஜ், கட்சித் தலைமை மீது கடுமையான அதிருப்தியில் இருப்பதாக அரசியல் வட்டாரங்களில் வெளியாகி வரும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அண்மையில் நடைபெற்ற 2026 சட்டமன்றத் தேர்தலில், அவர் தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினராகப் பிரதிநிதித்துவப்படுத்தி வந்த கன்னியாகுமரி மாவட்டத்தின் பத்மநாபபுரம் தொகுதி கூட்டணி கட்சியான காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்டதால், அவருக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக, எப்போதும் திமுகவின் பாரம்பரியக் கரைவேட்டியுடன் பொதுநிகழ்ச்சிகளில் பங்கேற்பதை வழக்கமாகக் கொண்ட மனோ தங்கராஜ், சமீபத்தில் நடைபெற்ற நீட் தேர்வு ரத்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் திமுக கரைவேட்டி அணியாமல் பங்கேற்றது இந்த அதிருப்தியைப் பகிரங்கப்படுத்தும் வகையில் அமைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
தொகுதிப் பங்கீடு மற்றும் வேட்பாளர் தேர்வு விவகாரத்தில் கட்சித் தலைமை காட்டிய மெத்தனப் போக்கினால் அதிருப்தியடைந்துள்ள அவர், தனது அடுத்தகட்ட அரசியல் நகர்வு குறித்து தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருவதாகத் தென்மாவட்ட அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
