பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் திருவாரூர் புதிய பேருந்து நிலையத்தில், தனது தந்தையின் வருகைக்காகக் காத்திருந்த 27 வயது இளம்பெண்ணிடம், தமிழக வெற்றிக் கழகத்தின் திருத்துறைப்பூண்டி வடக்கு ஒன்றியச் செயலாளர் ஆனந்த் மற்றும் அவரது நண்பர் அசோக் ஆகியோர் இரட்டை அர்த்த வசனங்களுடன் அத்துமீறலில் ஈடுபட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு எந்த அளவுக்குப் பலவீனமடைந்துள்ளது என்பதற்கு, பகல் நேரத்திலேயே பேருந்து நிலையம் போன்ற பொதுவெளியில் பெண்ணுக்கு நேர்ந்த இந்த அவமரியாதையே தெளிவான சான்றாகும்.

சம்பவம் குறித்துப் புகார் அளிக்கப்பட்டு, ஊடகங்களில் செய்தி வெளியான பின்பு, அந்த நிர்வாகியைக் கட்சியிலிருந்து நீக்கிவிட்டதாக தவெக தலைமை அறிவித்துள்ளது. வெறும் நீக்கம் மட்டுமே இதற்குப் போதுமான தீர்வாகாது. கொள்கை முழக்கங்களை மேடைகளில் பேசுவதோடு நிறுத்திக் கொள்ளாமல், தங்களது கட்சித் தொண்டர்களுக்கும் நிர்வாகிகளுக்கும் பெண்களை மதிக்கும் அடிப்படைப் பண்பையும் ஒழுக்கத்தையும் முதல்வர் திரு. விஜய் அவர்கள் கற்றுக்கொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.