பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (PCB) வீரர்களுக்கான மத்திய ஒப்பந்த முறையில் அதிரடி மாற்றமாக, பழைய ‘ஏ, பி, சி’ பிரிவுகளை நீக்கிவிட்டு ‘ஃபார்மேட் ட்ராக்ஸ்’ என்ற புதிய முறையைக் கொண்டுவந்துள்ளது. பிசிபி தலைவர் மொஹ்சின் நக்வி, பயிற்சியாளர்கள் ஆக்கிப் ஜாவேத் மற்றும் மைக் ஹெஸன் ஆகியோர் கூட்டாக வெளியிட்ட இந்த புதிய விதிமுறையின்படி, இனி வீரர்கள் விளையாடும் வடிவங்களின் (டெஸ்ட், ஒருநாள், டி20) அடிப்படையில் மட்டுமே ஒப்பந்தங்கள் பிரிக்கப்படும். இதன் மூலம் டெஸ்ட் போட்டிகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டு, வீரர்கள் தன்னிச்சையாக வெளிநாட்டு டி20 லீக் தொடர்களில் விளையாடுவதற்கான வாய்ப்புகள் முற்றிலும் முறைப்படுத்தப்படவுள்ளன.
முக்கியமாக, இனி வீரர்களின் தேர்வு மற்றும் ஒப்பந்தங்கள் எந்தவொரு தனிப்பட்ட சிபாரிசுகளின் அடிப்படையில் இல்லாமல், முற்றிலும் கம்ப்யூட்டர் தரவுகள் (Data) மற்றும் திறமையின் அடிப்படையில் மட்டுமே 85 சதவீதம் முடிவு செய்யப்படும் என பிசிபி தலைவர் திட்டவட்டமாகக் கூறியுள்ளார். தேர்வுக்குழுவின் அதிகாரம் வெறும் 15 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளதால், பாகிஸ்தான் கிரிக்கெட்டில் நீண்ட காலமாக நிலவி வந்த பாரபட்சம் மற்றும் உள்கட்சி பூசல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு, தகுதியான வீரர்களுக்கு மட்டுமே முன்னுரிமை கிடைக்கும் என கிரிக்கெட் வட்டாரத்தில் நம்பப்படுகிறது.
