தமிழக சட்டசபை தேர்தலில் வரலாற்று வெற்றி பெற்று, தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைத்துள்ள நிலையில், புதிய முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள விஜய் அவர்களின் உத்தரவுப்படி தமிழகத்தின் நிதி நிலை குறித்த வெள்ளை அறிக்கை இன்று வெளியிடப்பட்டுள்ளது. நிதித்துறை அமைச்சர் மரிய வில்சன் தலைமையிலான நிதித்துறை தயாரித்த இந்த வெள்ளை அறிக்கையின்படி, தமிழகத்தின் உண்மையான மொத்த கடனளவு 13.18 லட்சம் கோடியாக உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் 10 லட்சம் கோடி நேரடி கடனாகவும், எஞ்சிய 3.18 லட்சம் கோடி அரசு பொதுத்துறை நிறுவனங்களின் கடன் தொகையாகவும் உள்ளது; குறிப்பாக கடந்த 60 ஆண்டுகளில் தமிழக அரசு வாங்கிய மொத்த கடனான 5 லட்சம் கோடியை விட, கடந்த திமுக ஆட்சியில் 5 ஆண்டுகளில் மட்டுமே 5 லட்சம் கோடிக்கும் அதிகமாகக் கடன் வாங்கப்பட்டுள்ளது என்ற அதிரடித் தகவல் வெளியாகியுள்ளது.இந்த வெள்ளை அறிக்கையின்படி, தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு தனிநபர் மீதும் தற்போது 1 லட்சத்து 29 ஆயிரத்து 934 ரூபாய் கடன் சுமை உள்ளது.
தமிழக அரசு வாங்கிய கடன்களுக்கான வட்டி மட்டுமே ஆண்டுக்கு 67 ஆயிரம் கோடி ரூபாய் செலுத்தப்பட்டு வரும் நிலையில், கடந்த திமுக ஆட்சியில் முதலீடுகளுக்கு மட்டுமல்லாமல் அன்றாட செலவுகளுக்கே கடன் பெறும் அவல நிலை ஏற்பட்டுள்ளது என்று நிதியமைச்சர் மரிய வில்சன் குற்றம் சாட்டியுள்ளார். மாநிலத்தின் மின்சாரத்துறைக்கு அதிகபட்சமாக 2 லட்சத்து 47 ஆயிரத்து 130 கோடி ரூபாயும், போக்குவரத்துத் துறைக்கு 72 ஆயிரத்து 667 கோடி ரூபாயும் கடன் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ள தவெக அரசு, குஜராத், மகாராஷ்டிரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களை விட தமிழகத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மிகக் குறைவாக உள்ளதாகவும் இந்த வெள்ளை அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.
