“இனி நம்ம நெல்லை, தூத்துக்குடி விவசாயிகளுக்கு கவலையே இல்லப்பா!” என்று சொல்லும் அளவுக்கு, தென் மாவட்ட விவசாயப் பெருங்குடி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, தமிழக முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் அதிரடியாகப் பாபநாசம், சேர்வலாறு மற்றும் மணிமுத்தாறு அணைகளில் இருந்து தண்ணீர் திறந்துவிட உத்தரவிட்டுள்ளார்.
ஜூன் 15-ஆம் தேதி முதல் அக்டோபர் 13-ஆம் தேதி வரை மொத்தம் 121 நாட்களுக்கு, கார் பருவ சாகுபடிக்காக 6086.83 மில்லியன் கனஅடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்துவிட தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
இந்த அதிரடி உத்தரவின் மூலம் தாமிரபரணி பாசனப் பிரிவில் உள்ள நெல்லை மாவட்டத்தின் கன்னடியன், பாளையங்கால்வாய் உள்ளிட்ட கால்வாய்களும், தூத்துக்குடி மாவட்டத்தின் மருதூர், தென்கால், வடகால் உள்ளிட்ட 9 முக்கிய கால்வாய்களும் பயன்பெற உள்ளன.
அரசின் இந்த மெகா அறிவிப்பால் நெல்லை மாவட்டத்தின் அம்பாசமுத்திரம், சேரன்மகாதேவி மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தின் திருவைகுண்டம், ஏரல் உள்ளிட்ட பல்வேறு வட்டாரங்களில் உள்ள சுமார் 36,521 ஏக்கர் விவசாய நிலங்கள் நேரடியாகப் பாசன வசதி பெறவுள்ளதால், நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் முதலமைச்சர் விஜய்க்கு தங்களது நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்து வருகின்றனர்.
