40 வயதுக்கு மேற்பட்டவர்கள்தான் அரசியல் பேசுவார்கள் என்கிற காலம் மாறிவிட்டது; தற்போதைய இளைஞர்களும் அரசியல் சார்ந்து அதிகம் படிக்கிறார்கள் என்று அ.தி.மு.க-வைச் சேர்ந்த காளியம்மாள் தெரிவித்துள்ளார். அண்மையில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், தமிழகத்தை அதிகமுறை ஆட்சி செய்த அ.தி.மு.க மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்பட்டது அக்கட்சியினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து அக்கட்சியின் மூத்த தலைவர்கள் பலர் அடுத்தடுத்து விலகி வரும் நிலையில், காளியம்மாளின் இந்த நேர்காணல் முக்கியத்துவம் பெறுகிறது.
ஒரு இயக்கத்திற்கு மூத்தவர்களின் அனுபவம் எவ்வளவு முக்கியமோ, அதே அளவுக்குப் புதிய ரத்தமும் பாய்ச்சப்பட வேண்டும் என்று கூறிய அவர், எந்தவொரு கட்சியாக இருந்தாலும் இளைஞர்களுக்கு அதிக வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுக்க வேண்டும் என்றும், தலைவர்களாக அனுபவம் மிக்கவர்கள் இருந்தால், செயலாளர்களைப் போலச் செயல்படும் களப்பணிகளில் இளைஞர்கள் வர வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
தமிழக அரசியல் களத்தில் புதிதாக உருவெடுத்துள்ள ‘தமிழக வெற்றிக் கழகம்’ (த.வெ.க) கட்சியில், இளைஞர்கள் அதிக அளவில் எம்.எல்.ஏ-க்களாகவும், அமைச்சர்களாகவும் பொறுப்பு வகித்து வரும் தற்போதைய சூழலில், அரசியலில் இளைஞர்களுக்கான முக்கியத்துவம் குறித்த கருத்து பரவலாக ஓங்கி ஒலிக்கிறது. இதனைச் சுட்டிக்காட்டும் விதமாகப் பேசிய காளியம்மாள், “அ.தி.மு.க-வின் மூத்த தலைவர்களுக்கும் கட்சியை இளைஞர்களின் கைகளில் ஒப்படைக்க வேண்டும் என்கிற எண்ணம் இருக்கிறது. அது நடந்தால், கட்சியால் இன்னும் வேகமாக ஓட முடியும்” என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகி, கடந்த தேர்தலுக்கு முன்பாக அ.தி.மு.க-வில் இணைந்த காளியம்மாள், தற்போதைய தேர்தல் தோல்விகள் மற்றும் மூத்த நிர்வாகிகளின் வெளியேற்றத்திற்குப் பிந்தைய சூழலில், அ.தி.மு.க-வின் தலைமைப் பொறுப்புகளிலும், களப்பணிகளிலும் இளைஞர்களுக்கு வழிவிட வேண்டும் என்று வெளிப்படையாகப் பேசியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
