தமிழகச் சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ் அவர்கள் சென்னையில் உள்ள அரசு பொது மருத்துவமனையில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், இந்த மருத்துவமனைக்கு நாளொன்றுக்குச் சுமார் 2,500 முதல் 3,000 நோயாளிகள் வரை சிகிச்சைக்காக வருவதைச் சுட்டிக்காட்டினார்.
குறிப்பாக, இதயவியல் துறைக்கு கூடுதல் மருத்துவர்கள் தேவைப்படுவதால் அவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், பொதுமக்கள் பயன்பெறும் வகையில் மற்றொரு முழு உடல் பரிசோதனை மையத்தைக் கொண்டுவரத் தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அமைச்சர் உறுதி அளித்தார்.
மறுபுறம், தமிழகத்தில் நிலவி வரும் மின்வெட்டுப் பிரச்சினை குறித்துப் பேசிய அமைச்சர், மருத்துவமனைகளில் மின்சாரத்தின் மூலம் இயங்கக்கூடிய பல்வேறு உயிர்காக்கும் கருவிகள் உள்ளதால், அங்கு எவ்வித மின்தடையும் ஏற்படாமல் தடையற்ற மின்சாரம் வழங்குவது தொடர்பாக மின்சாரத்துறை அமைச்சரிடமும், முதலமைச்சரிடமும் விரிவாகப் பேசியுள்ளதாகக் குறிப்பிட்டார்.
ஒருவேளை எதிர்பாராத மின்தடை ஏற்பட்டால், அதைச் சமாளிக்கத் தேவையான அதிநவீன ஜெனரேட்டர் வசதிகளைத் தயார் நிலையில் வைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகக் கூறினார்.
தொடர்ந்து, “இந்த ஆட்சி 3 அல்லது 6 மாதத்திற்குள் கலைந்துவிடும்” என்று முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சித்து வருவது குறித்துக் கேட்டதற்கு, “எங்கள் ஆட்சி கலைய வாய்ப்பே இல்லை, கண்டிப்பாக 5 ஆண்டுகள் நீடிக்கும்; ஒருவேளை தேர்தல் வந்தாலும் அதைச் சந்திக்க த.வெ.க முற்றிலும் தயாராக உள்ளது, ஆனால் மீண்டும் தேர்தலைச் சந்திக்கும் துணிச்சல் தி.மு.க-விற்கு இருக்கிறதா?” என ஆவேசமாகப் பதிலடி கொடுத்துப் பேட்டியை நிறைவு செய்தார்.
