சமூக வலைதளங்களில் எப்போதுமே வித்தியாசமான உணவு சேர்க்கைகள் விவாதப் பொருளாக மாறுவது வழக்கம். அந்த வகையில், தற்போது தேநீரில் இட்லியை நனைத்து சாப்பிடும் விசித்திரமான உணவு கலவை குறித்த புகைப்படம் இணையத்தில் காட்டுத்தீயாக பரவி வருகிறது. இந்த வினோதமான உணவுப் பழக்கம், சிறந்த உணவுப் பிரியரும், திருவனந்தபுரம் தொகுதி காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினருமான சசி தரூரின் கவனத்திற்குச் சென்றது. இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அவர், தனது எக்ஸ்  பக்கத்தில், “என் காலை உணவை யாரோ ஒருவர் வேண்டுமென்றே சீண்டிப் பார்க்கிறார்கள்” என்று நகைச்சுவையாகக் குறிப்பிட்டு, இந்த விசித்திரமான உணவு இணைப்பிற்கு எதிரான தனது கடுமையான கண்டனத்தை  வழங்கியுள்ளார்.

தென்னிந்தியாவின் அடையாளமாகத் திகழும் மென்மையான இட்லியை, மசாலா தேநீரில் நனைத்து சாப்பிடுவதைக் கண்ட சசி தரூர், இது ஒரு “உணவுக் குற்றம்” என்று சாடியுள்ளார். மேலும், “இட்லியை சாம்பார் அல்லது சட்னியுடன் சேர்த்து சாப்பிடுவதுதான் வழக்கம்; அதை விடுத்து தேநீரில் நனைத்து சாப்பிடுவதை சகித்துக் கொள்ளவே முடியாது” என்று அவர் தனது பதிவில் வெளிப்படுத்தியுள்ளார்.

சசி தரூரின் இந்த காரசாரமான, அதே சமயம் வேடிக்கையான பதிவு இணையவாசிகளிடையே பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது. பலரும் இட்லிக்கு நேர்ந்த இந்த அவலத்தைக் கண்டு சசி தரூரின் கருத்தை ஆதரித்து வரும் நிலையில், இந்த செய்தி சமூக வலைதளங்களில் தற்போதைய ஹாட் டாபிக்காக வலம் வந்து கொண்டிருக்கிறது.