அமெரிக்காவின் நியூயார்க் நகரில் வசித்து வரும் யாஷ் சர்மா என்ற இந்திய இளைஞர், அங்கு ஆண்டுக்கு 1 கோடி ரூபாய் சம்பளம் வாங்கினாலும் கூட ஏன் எதிர்பார்க்கும் ஆடம்பர வாழ்க்கையை வாழ முடியாது என்பது குறித்த கசப்பான உண்மைகளைத் தனது இன்ஸ்டாகிராம் வீடியோவில் உடைத்துப் பேசியுள்ளது தற்பொழுது உலகளாவிய நெட்டிசன்கள் மத்தியில் மிகப்பெரிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
வெளிநாடுகளில் பல கோடி ரூபாய் சம்பளம் என்றதும் இந்திய மக்கள் மத்தியில் இருக்கும் பிரம்மாண்ட பிம்பத்தை உடைக்கும் வகையில் யாஷ் சர்மா பல்வேறு புள்ளிவிவரங்களைப் பகிர்ந்துள்ளார். நியூயார்க்கில் 1 கோடி ரூபாய் பேக்கேஜ் இருந்தாலும், அதில் ஃபெடரல் வரி, மாநில வரி, நியூயார்க் நகர வரி, சமூக பாதுகாப்பு மற்றும் மருத்துவக் காப்பீடு (Medicare) என ஒட்டுமொத்தமாக 35 முதல் 40 சதவீதம் வரை கைக்கு வராமலேயே வரியாகப் பறிபோய்விடுகிறது என்று அவர் கவலையோடு தெரிவித்துள்ளார்.
View this post on Instagram
அதுமட்டுமின்றி, அங்கு ஒரு சாதாரண அபார்ட்மெண்ட் வாடகைக்கு எடுக்க வேண்டும் என்றால் கூட இந்திய மதிப்பில் மாதத்திற்கு 2 லட்சம் முதல் 3 லட்சம் ரூபாய் வரை செலவழிக்க வேண்டியுள்ளது; இதனுடன் தினசரி போக்குவரத்து, மருத்துவம், மளிகைப் பொருட்கள் மற்றும் இன்சூரன்ஸ் போன்ற அத்தியாவசியச் செலவுகளும் சேர்ந்து சம்பளத்தை முழுமையாகக் கரைத்துவிடுகிறது.
இதன் காரணமாக, நியூயார்க்கில் 1 கோடி ரூபாய் சம்பாதிப்பவரை விட, இந்தியாவிலேயே இருந்து கொண்டு ஆண்டுக்கு 25 முதல் 30 லட்சம் ரூபாய் வரை சம்பாதிப்பவர் மிகவும் மகிழ்ச்சியாகவும், நிம்மதியாகவும் வாழ முடியும் என்று அவர் ஒப்பிட்டுக் கூறியுள்ளார்.
தற்பொழுது 4 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளையும், 22 ஆயிரத்திற்கும் மேற்பட்ட லைக்குகளையும் பெற்றுள்ள இந்த வீடியோவின் கமெண்ட் செக்ஷனில், “அமெரிக்காவில் முடி வெட்டுவதில் இருந்து பிளம்பிங் வேலை வரை அனைத்தும் காஸ்ட்லி” என்றும், “அங்கு Blinkit, Swiggy, Zomato போன்ற வசதிகள் கிடையாது, வீட்டு வேலைகளை நாமேதான் செய்ய வேண்டும்” என்றும் வெளிநாடு வாழ் இந்தியர்கள் பலரும் தங்களது குமுறல்களைப் கொட்டி இந்த வீடியோவை இணையத்தில் அசுர வேகத்தில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
