திருமணத்திற்கு மீறிய கள்ள உறவால் வாலிபர் ஒருவர் படுபயங்கரமாகக் கொலை செய்யப்பட்டு, உடல் துண்டு துண்டாக வெட்டி எரிக்கப்பட்ட வழக்கில், கொலையாளிகளான கணவன் – மனைவியை அவர்களின் மொபைல் ‘யூடியூப் சர்ச் ஹிஸ்டரி’ (YouTube Search History) மூலமாகவே காவல்துறையினர் கையும் களவுமாகப் பிடித்துள்ள நெஞ்சைப் பதறவைக்கும் சம்பவம் ஒட்டுமொத்த தேசத்தையும் அதிர வைத்துள்ளது!
உ.பி-யின் ஃபதேபூர் மாவட்டத்தைச் சேர்ந்த 30 வயதான விஜய் நிஷாத் என்பவர் கடந்த மே 8-ஆம் தேதி முதல் மாயமான நிலையில், அவரது குடும்பத்தினர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் களமிறங்கினர்.
விஜய்யின் மொபைல் பயன்பாட்டு வரலாற்றை ஆராய்ந்தபோது, அவருக்கும் ஹமீர்பூரைச் சேர்ந்த கிரண் என்ற பெண்ணுக்கும் இடையே கள்ளக்காதல் இருந்தது அம்பலமானது. சூரத்திலிருந்து ஊர் திரும்பிய கிரணின் கணவர் கம்தாவுக்கு இந்த விஷயம் தெரியவர, ஆத்திரமடைந்த கணவனும் மனைவியும் சேர்ந்து விஜய்யைக் தீர்த்துக் கட்ட மாஸ்டர் பிளான் போட்டுள்ளனர்.
திட்டமிட்டபடி கிரண் ஆசை வார்த்தை கூறி விஜய்யைத் தன் வீட்டிற்கு வரவழைக்க, அங்கு கம்தா ஒரு மரச்சட்டத்தால் அடித்து விஜய்யை கொடூரமாகக் கொலை செய்துள்ளார். பின்னர் உடலை அப்புறப்படுத்துவதற்காக ரம்பம் மற்றும் கிரைண்டர் மூலம் கால்களைத் துண்டித்து, பைக்கில் ஏற்றி கான்பூரின் ரேவுனா காட்டுப் பகுதிக்குக் கொண்டு சென்று தீயிட்டு எரித்துள்ளனர்!
இந்த வழக்கில் க்ளைமாக்ஸ் திருப்பமாக அமைந்தது கொலையாளிகளின் மொபைல் போன்கள் தான். போலீசாருக்கு சந்தேகம் வந்து கிரண் மற்றும் கம்தாவின் யூடியூப் தேடல் வரலாற்றை சோதித்தபோது, அவர்கள் “கொலைக்கான தண்டனை என்ன?”, “மரண தண்டனை சட்டம் எப்படி?”, “போலீஸ் என்கவுன்டரில் இருந்து தப்பிப்பது எப்படி?” என கூகுள், யூடியூப்பில் அலசி ஆராய்ந்த டிஜிட்டல் ஆதாரங்கள் சிக்கின.
இந்த ஆதாரங்களை வைத்து போலீசார் நையப்புடைத்ததில், தம்பதியினர் தங்களின் குற்றத்தை ஓப்பனாக ஒப்புக்கொண்டனர். இதனைத் தொடர்ந்து, காட்டுப் பகுதியில் இருந்து விஜய்யின் எலும்புக்கூடு, கொலைக்கு பயன்படுத்தப்பட்ட ரம்பம், கிரைண்டர், கதவுச் சட்டம் மற்றும் பைக் ஆகியவற்றை மீட்ட போலீசார், கொடூர தம்பதியை அதிரடியாகக் கைது செய்து கம்பி எண்ண வைத்துள்ளனர்.
