சர்வதேச கேபின் க்ரூ தினத்தை முன்னிட்டு, இண்டிகோ விமானப் பணிப்பெண் ஜெனிஃபர் என்பவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள நெகிழ்ச்சியான வீடியோ இணையத்தில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது. விமானத்தில் பயணம் செய்த தமிழ் பேசும் மூதாட்டி ஒருவர், மூட்டு மற்றும் கால் வலியால் கடும் அவதிப்படுவதை ஜெனிஃபர் கவனித்துள்ளார். தான் சாப்பிட அமர்ந்த நிலையிலும், அந்த பாட்டியின் வலியைக் கண்டு பொறுக்க முடியாமல் ஓடிச்சென்று, விமானத்தின் தரையிலேயே அமர்ந்து அவரது கால்களை அன்போடு மசாஜ் செய்து உதவி புரிந்துள்ளார்.

​மொழி தெரியாவிட்டாலும் அந்த மூதாட்டி, ஜெனிஃபரின் கைகளில் முத்தமிட்டு “நன்றி மா” எனக் கூறி நெகிழ்ந்துள்ளார். இந்த வீடியோ இணையத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜெனிஃபரின் மனிதாபிமானத்தைப் பலரும் பாராட்டி வரும் வேளையில், “இதுபோன்ற செயல்கள் பணிப்பெண்களின் வேலையை மற்றவர்கள் தவறாகப் புரிந்துகொள்ள வழிவகுக்கும்” என சிலர் கவலை தெரிவித்துள்ளனர். இதற்குப் பதிலளித்த ஜெனிஃபர், “இது எனது சொந்த விருப்பம், என் தாய்க்கு இப்படி நடந்திருந்தால் என்ன செய்திருப்பேனோ அதையே செய்தேன்” என்று உருக்கமாகக் கூறியுள்ளார்.