தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் குறித்து, மாநிலத்தின் 234 தொகுதிகளுக்கும் நேரில் சென்று கள ஆய்வு மேற்கொள்வதற்காக திமுக தலைவரான மு.க.ஸ்டாலின் 38 பேர் கொண்ட சிறப்பு ஆய்வுக் குழுவை நியமித்துள்ளார். இக்குழுவினருடனான ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய அவர், கட்சியின் அடுத்தகட்ட மாற்றங்களுக்கும் சீர்திருத்தங்களுக்கும் இந்த ஆய்வு மிகவும் முக்கியமானது என்று வலியுறுத்தினார்.

மேலும், நீங்கள் ஒவ்வொருவரும் தனது பிரதிநிதிகளாகவும், தனது காதுகளாகவும் செயல்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்ட அவர், தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கு இடம் தராமல், களத்தில் கட்சியினர் கூறும் உண்மைகளை எவ்வித சமரசமுமின்றி அப்படியே தன்னிடம் கொண்டு வந்து சேர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வின் போது யாரையும் காப்பாற்றவோ அல்லது பழிவாங்கவோ முற்படக் கூடாது என்றும், ஒரு மருத்துவரிடம் நோயாளி உண்மையை மறைக்கக் கூடாது என்பதைப் போல, என்னிடம் எதையும் மறைக்காமல் துல்லியமாகத் தெரிவிக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதனால் “தலைவரான என் மீதே குறைகள் கூறப்பட்டாலும், அதை அறிக்கையில் தயங்காமல் பதிவு செய்யுங்கள் நோய் என்னவென்று தெரிந்தால் தான் அதற்கான சரியான மருந்தை வழங்க முடியும்” என்று குறிப்பிட்ட மு.க.ஸ்டாலின், இந்தத் தகவல்களைத் துல்லியமான ஒரு ‘ஸ்கேன் ரிப்போர்ட்’ போல ஜூன் 5-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.