அமெரிக்காவின் ஒஹாயோ மாகாணத்தில் உள்ள அக்ரான் நகரில், நடுவானில் கட்டுப்பாட்டை இழந்த சிறிய ரக விமானம் ஒன்று குடியிருப்பு பகுதியில் உள்ள வீட்டின் மீது மோதி பயங்கர விபத்துக்குள்ளானது. அக்ரான் ஃபல்டன் விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட ‘பைப்பர் பிஏ-28’ என்ற அந்த விமானம், புறப்பட்ட சில நிமிடங்களிலேயே கேன்டர்பரி சர்க்கிள் பகுதியில் இருந்த ஒரு வீட்டின் மீது விழுந்து நொறுங்கியது.

இந்த விபத்தின் தாக்கத்தால் விமானமும் அந்த வீடும் தீப்பற்றி எரியத் தொடங்கின. இந்த கோர விபத்தில் விமானத்தில் பயணம் செய்த இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தனர். அதிர்ஷ்டவசமாக, விமானம் மோதிய அந்த வீட்டில் இருந்த தம்பதியினரும் அவர்களது இரண்டு குழந்தைகளும் உயிர் தப்பினர்.

மேலும் தகவலறிந்து வந்த மீட்புப் படையினர் தீயை அணைத்து காயமடைந்தவர்களை மீட்டனர். இந்த விபத்து குறித்து அமெரிக்காவின் தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் மற்றும் கூட்டாட்சி விமான போக்குவரத்து நிர்வாகம் ஆகியவை தீவிர விசாரணையைத் தொடங்கியுள்ளன.