மருத்துவப் படிப்புகளுக்கான நீட் (NEET) நுழைவுத்தேர்வில் முறைகேடுகளைத் தவிர்க்கும் பொருட்டு, அடுத்த ஆண்டு முதல் இத்தேர்வு கணினி வழியிலான தேர்வாக (Computer Based Test – CBT) நடத்தப்படும் என்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.

சமீபகாலமாக நீட் தேர்வில் வினாத்தாள் கசிவு மற்றும் பல்வேறு புகார்கள் எழுந்து வரும் நிலையில், தேர்வு முறையில் பெரும் மாற்றத்தைக் கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இது குறித்துத் தில்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர், அடுத்த கல்வியாண்டு முதல் நீட் தேர்வு பழைய நடைமுறையான ஓஎம்ஆர் (OMR) தாள் முறைக்குப் பதிலாக, முழுமையாகக் கணினி வழியாகவே நடத்தப்படும்.

இதற்காக நாடு முழுவதும் தேவையான அதிநவீன கணினி மையங்கள் மற்றும் தொழில்நுட்பக் கட்டமைப்புகள் தட்டுப்பாடின்றி ஏற்படுத்தப்படும்.  தேசிய தேர்வு முகமையானது (NTA) ஆண்டுக்குச் சுமார் 1 கோடி மாணவர்களின் தேர்வுகளைக் கையாள்கிறது. இவ்வளவு பெரிய எண்ணிக்கையிலான தேர்வுகளில் எவ்விதத் தவறுகளும் நடக்காதவாறு அனைத்துப் பாதுகாப்பு நடவடிக்கைகளும் பலப்படுத்தப்படும்.

தேர்வு நடைமுறையில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்வதே அரசின் நோக்கம் என்று குறிப்பிட்ட அமைச்சர், தகுதியுள்ள மாணவர்களின் மருத்துவக் கனவு எவ்விதத்திலும் பாதிக்கப்படாது என்றும், தவறுகள் நடப்பதற்கு இடமே இல்லாத வகையில் புதிய தொழில்நுட்ப வசதிகள் புகுத்தப்படும் என்றும் உறுதியளித்தார்.