கேரள மாநிலத்தை சேர்ந்த ஜெயா நந்தனின் மகள் பிரபல்லா (23), தனக்கு நிச்சயம் செய்யப்பட்ட மாப்பிள்ளை விபத்தில் உயிரிழந்த துக்கத்தில் தற்கொலை செய்துகொண்டார். பிரபல்லாவுக்கும் நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த மணி என்பவருக்கும் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது.
விரைவில் திருமணம் நடைபெற இருந்த நிலையில், கடந்த மாதம் மணி ஒரு சாலை விபத்தில் சிக்கி படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் சிகிச்சை பலனின்றி மணி நேற்று முன்தினம் உயிரிழந்தார்.
திருமணம் நிச்சயம் செய்யப்பட்ட மாப்பிள்ளை இறந்ததால் பிரபல்லா பெரும் மனவேதனையில் இருந்துள்ளார்.
இந்நிலையில், அவரது குடும்பத்தினர் ஒரு திருமண நிகழ்ச்சிக்குச் சென்றிருந்தபோது, வீட்டில் தனியாக இருந்த பிரபல்லா தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணம் நடக்கவிருந்த நிலையில் மணப்பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
