சேலத்தில் இருந்து பொள்ளாச்சிக்குச் சுற்றுலா வந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர், லாரி மோதிய விபத்தில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் காடையாம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் தனபால் (37). இவர் தனது மனைவி மேனகா (35), மகள் கனிஷ்கா (17), மகன் சுர்ஷித் (12) மற்றும் உறவினர் சினேகா (23) ஆகியோருடன் காரில் பொள்ளாச்சி நோக்கி சுற்றுலா வந்துள்ளார். பொள்ளாச்சி – பல்லடம் சாலையில் நெகமம் அருகே கார் வந்து கொண்டிருந்தபோது, எதிரே அதிவேகமாக வந்த லாரி ஒன்று காரின் மீது நேருக்கு நேர் மோதியது.
இந்தக் கோர விபத்தில் கார் சுக்குநூறாக நொறுங்கியது. இதில் தனபால், மேனகா மற்றும் சினேகா ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். படுகாயமடைந்த கனிஷ்கா மற்றும் சுர்ஷித் ஆகியோரை நெகமம் போலீசார் மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், மருத்துவமனை செல்லும் வழியிலேயே சிறுமி கனிஷ்காவும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
தற்போது சிறுவன் சுர்ஷித் பலத்த காயங்களுடன் கோவை அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், சடலங்களை உடற்கூராய்விற்காக அனுப்பி வைத்தனர். மேலும், விபத்திற்குக் காரணமான கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் சரவணன் (39) என்பவரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்தத் துயரச் செய்தி குறித்து முதல்வர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
“பொள்ளாச்சி அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் 4 பேர் உயிரிழந்த செய்தி கேட்டு மிகுந்த மனவேதனை அடைந்தேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி நிவாரண உதவிகளை வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். முதல்வர் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.3 லட்சம் வழங்கப்படும்.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஒருவருக்கு ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்கவும், அவருக்கு உயர்தர சிகிச்சை அளிக்கப்படுவதை உறுதி செய்யவும் அதிகாரிகளுக்கு முதல்வர் அறிவுறுத்தியுள்ளார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. போலீசார் விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
