தமிழக சட்டமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு ஆதரவாக நின்ற இயக்குநர் சேரன், தற்போது முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள விஜய்க்கு ஆதரவாகப் பேசியுள்ளது இணையத்தில் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

முதல்வர் விஜய் பதவியேற்ற முதல் நாளிலேயே இலவச மின்சாரம் மற்றும் தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரங்களில் சமூக வலைதளங்களில் கடுமையான விமர்சனங்கள் எழுந்த நிலையில், சேரன் அதற்குப் பதிலடி கொடுத்துள்ளார்.

“யாரோ ஒருவரை நம்பி மக்கள் முதல்வர் நாற்காலியில் அமர வைத்துள்ளனர், அவர் புதியவர் என்பதால் அரசியல் நுணுக்கங்களைப் புரிந்துகொள்ளக் கொஞ்சம் கால அவகாசம் தேவை” என்று குறிப்பிட்டுள்ள அவர், முதல் நாளிலேயே குறை கூறாமல் வேலை செய்ய விடுங்கள் என்று கேட்டுக்கொண்டார்.

மேலும், இது விஜய்க்குப் போடும் ‘ஜால்ரா’ கிடையாது என்றும், ஒரு அமைதியான சமூகம் உருவாக வேண்டும் என்ற நோக்கத்தில் பொதுவான கருத்தையே முன்வைப்பதாகவும் சேரன் விளக்கியுள்ளார்.

மக்கள் மாற்றத்தை விரும்பி வாக்களித்திருப்பதால், அவர் சரியாகச் செயல்படுகிறாரா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம் எனத் தெரிவித்துள்ள சேரன், முதல்வர் விஜய்க்குத் தனது வாழ்த்துகளையும் பகிர்ந்துள்ளார்.