தமிழக முதலமைச்சராக சி. ஜோசப் விஜய் அவர்கள் பதவியேற்ற விழாவில், தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாகப் பாடப்பட்டதற்குத் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் தனது கடும் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார். நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற இந்த விழாவில், வந்தே மாதரம் பாடலுக்கு முதலிடமும், தேசிய கீதத்திற்கு இரண்டாம் இடமும் அளித்து, தமிழ்த்தாய் வாழ்த்தைப் பின்னுக்குத் தள்ளியது ஒட்டுமொத்தத் தமிழர் உணர்வுகளையும் காயப்படுத்தியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

​”தமிழ்நாட்டின் பாரம்பரிய மரபுகளைப் புறக்கணித்து, நடைமுறையில் இல்லாத வந்தே மாதரம் பாடலை முதலிடத்தில் திணித்தது ஏற்றுக்கொள்ள முடியாத செயல்” என்று சாடியுள்ள வேல்முருகன், மொழியை மதிக்காத ஆட்சி மக்களின் மனதை மதிக்காத ஆட்சியாகவே பார்க்கப்படும் என்றும் எச்சரித்துள்ளார். ஆளுநர், முதலமைச்சர் மற்றும் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் முன்னிலையில் தமிழுக்கு உரிய மரியாதை வழங்கப்படாதது அதிர்ச்சியளிப்பதாகக் குறிப்பிட்டுள்ள அவர், இனிவரும் காலங்களில் இத்தகைய மரபு மீறல்கள் நடைபெறாத வண்ணம் உறுதியான வழிகாட்டுதல்களை அரசு வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.