கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் பெருந்தல்மன்னா பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்த தேஜஸ் என்ற மாணவன், பள்ளி நிர்வாகத்தின் பிடிவாதத்தால் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தேஜஸின் பெற்றோர் அவரை வேறு பள்ளிக்கு மாற்ற விரும்பி, தற்போதைய பள்ளியில் மாற்றுச் சான்றிதழ் (TC) கேட்டுள்ளனர். ஆனால், பள்ளி நிர்வாகம் சான்றிதழ் வழங்கத் தொடர்ந்து மறுப்புத் தெரிவித்து இழுத்தடித்ததாகக் கூறப்படுகிறது.

இதனால் தனது கல்வி பாதிக்கப்படுமோ என்ற பயத்திலும், மிகுந்த மன உளைச்சலிலும் இருந்த மாணவன் தேஜஸ், வேறு வழியின்றி தனது உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.

கல்வி கற்க வேண்டிய வயதில் ஒரு சிறுவன் சான்றிதழுக்காக உயிரிழந்திருப்பது கேரளாவையே உலுக்கியுள்ளது. இந்தப் புகாரைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகத்தின் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் இந்தப் பள்ளிக்கு எதிராகக் கடும் கண்டனக் குரல்களை எழுப்பி வருகின்றனர்.