பாகிஸ்தான் சூப்பர் லீக் (PSL) 2026 தொடர் ஒருவழியாக முடிவுக்கு வந்துள்ளது. இறுதிப்போட்டியில் ஹைதராபாத் கிங்ஸ்மேன் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி, பாபர் அசாம் தலைமையிலான பெஷாவர் சால்மி அணி இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வாகை சூடியது.
சாம்பியன் பட்டம் வென்ற பெஷாவர் அணிக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் மொஹ்சின் நக்வி 14 கோடி பாகிஸ்தான் ரூபாய் பரிசுத்தொகையாக வழங்கினார். கேட்பதற்கு இது பெரிய தொகையாகத் தோன்றினாலும், இந்திய ரூபாயுடன் ஒப்பிடும்போது இதன் மதிப்பு வெறும் 4.76 கோடி ரூபாய் மட்டுமே.
இந்தியாவின் ஐபிஎல் (IPL) தொடருடன் ஒப்பிடும்போது இந்தத் தொகை மிகவும் சொற்பமானது. ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி ரிஷப் பண்ட்டிற்கு மட்டும் ஆண்டுக்கு 27 கோடி ரூபாய் சம்பளம் வழங்குகிறது. இதனை பாகிஸ்தான் கரன்சியில் மாற்றினால் சுமார் 80 கோடி ரூபாய். அதாவது, பாகிஸ்தான் லீக்கின் ஒட்டுமொத்த சாம்பியன் பரிசுத்தொகையை விட ஒரு இந்திய வீரரின் சம்பளம் 5 மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் கிங்ஸ்மேன் அணி, பெஷாவர் அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் திணறியது. ஆரோன் ஹார்டி 4 விக்கெட்டுகளை வீழ்த்தி மிரட்ட, ஹைதராபாத் அணி 18 ஓவர்களில் 129 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது.
அடுத்து களம் இறங்கிய பெஷாவர் அணிக்கும் தொடக்கம் சரியாக அமையவில்லை. இருப்பினும், பந்துவீச்சில் அசத்திய ஆரோன் ஹார்டி, பேட்டிங்கிலும் அதிரடி காட்டி 56 ரன்கள் விளாசினார். அவருக்கு உறுதுணையாக அப்துல் சமத் 48 ரன்கள் எடுக்க, பெஷாவர் அணி 15.2 ஓவர்களிலேயே இலக்கை எட்டி கோப்பையைத் தூக்கியது.
