தமிழக அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள தேர்தல் முடிவுகள் வெளியாகவுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தனது அடுத்தகட்ட நகர்வுகளைத் தீவிரப்படுத்தியுள்ளார். குறிப்பாக, வாக்கு எண்ணிக்கை மையங்களில் முறைகேடுகள் ஏதும் நடக்காமல் கண்காணிப்பதற்கும், முகவர்களுக்குத் தேவையான வழிகாட்டுதல்களை வழங்குவதற்கும் தவெக-வின் இடைக்காலக் குழுத் தலைவராக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனை நியமிக்க விஜய் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் கசிகின்றன.
மேலும் நேற்று புஸ்ஸி ஆனந்த், செங்கோட்டையன் மற்றும் ஆதவ் அர்ஜுனா ஆகியோருடன் விஜய் நடத்திய ஆலோசனையில், எக்சிட் போல் முடிவுகள் மற்றும் தேர்தல் நிலவரங்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தின் போது, வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளன்று வேட்பாளர்களும், தவெக முகவர்களும் கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்து செங்கோட்டையன் ஒரு விரிவான அறிக்கையை விஜயிடம் சமர்ப்பித்ததாகக் கூறப்படுகிறது.
இதனால் வாக்கு எண்ணிக்கை மையங்களில் தற்காப்புடன் செயல்படுவது, வாக்குகளைச் சரியாகச் சரிபார்ப்பது மற்றும் தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளை முறையாகப் பின்பற்றுவது தொடர்பான முக்கிய ஆலோசனைகள் அந்த அறிக்கையில் இடம்பெற்றுள்ளன.
இந்நிலையில் அனுபவம் வாய்ந்த ஒருவரை முன்னிறுத்தி, தேர்தல் பணிகளைத் துல்லியமாக ஒருங்கிணைக்க விஜய் எடுக்கும் இந்த முயற்சி, தவெக தொண்டர்களிடையே பெரும் உற்சாகத்தையும் நம்பிக்கையையும் ஏற்படுத்தியுள்ளது.
