ஐபிஎல் 2026 தொடரில் நேற்று நடைபெற்ற விறுவிறுப்பான ஆட்டத்தில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 103 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. அணியின் இந்த படுதோல்வியைக் கண்டு முன்னாள் கேப்டன் ரோகித் சர்மா பெவிலியனில் மிகுந்த மனவருத்தத்துடன் காணப்பட்ட வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
தொடையில் ஏற்பட்ட காயம் காரணமாக ரோகித் சர்மா இந்தப் போட்டியில் விளையாடவில்லை. அவர் ‘இம்பாக்ட் பிளேயராக’ களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கேப்டன் ஹர்திக் பாண்டியா டாஸின் போது ரோகித் விளையாடவில்லை என்பதை உறுதிப்படுத்தினார். தனது அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து நிலைகுலைவதைக் கண்டு, களத்திற்கு வெளியே அமர்ந்திருந்த ரோகித்தின் முகம் மிகுந்த வேதனையை வெளிப்படுத்தியது.
Rohit Sharma is sitting in the Mumbai Indians dressing room, looking upset with his teammates. He wants to help the team win, but from there he can’t do much. He’s just watching his own legacy fall apart right in front of him.😢💔 pic.twitter.com/NEj4K75l2Z
— 𝐑𝐮𝐬𝐡𝐢𝐢𝐢⁴⁵ (@rushiii_12) April 23, 2026
முதலில் ஆடிய சென்னை அணிக்கு சஞ்சு சாம்சன் தூணாக விளங்கினார். அபாரமாக ஆடிய அவர் 54 பந்துகளில் 101* ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இது இந்த சீசனில் அவர் அடிக்கும் 2-வது சதமாகும். சாம்சனின் அதிரடியால் சென்னை அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 207 ரன்கள் என்ற இமாலய இலக்கை நிர்ணயித்தது.
208 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடிய மும்பை அணி, சென்னை வீரர் அக்யீல் ஹொசைனின் சுழலில் சிக்கியது. திலக் வர்மா (37), சூர்யகுமார் யாதவ் (36) தவிர மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இறுதியில் 19 ஓவர்களில் 104 ரன்களுக்கு மும்பை அணி சுருண்டது. அக்யீல் ஹொசைன் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். மேலும் இந்த வெற்றியின் மூலம் புள்ளிப்பட்டியலில் சென்னை அணி 5-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. மும்பை அணி 8-வது இடத்தில் நீடிக்கிறது.
