மகாராஷ்டிரா மாநிலம் சத்ரபதி சம்பாஜிநகரில் மக்கள் நடமாட்டம் மிகுந்த பெட்ரோல் பங்க் ஒன்றில் பட்டப்பகலில் நடந்த கொடூரக் கொலைச் சம்பவம் ஒட்டுமொத்த மாவட்டத்தையே உலுக்கியுள்ளது.

அங்குள்ள பெட்ரோல் பங்கில் ஊழியராகப் பணியாற்றி வந்த பூஜா (27) என்ற பெண்ணை, அவரது இரண்டாவது கணவர் சத்யம் என்பவர் ஓட ஓட விரட்டிக் கழுத்தை அறுத்துக் கொலை செய்துள்ளார்.

பூஜா தனது முதல் கணவரின் மறைவுக்குப் பின், குழந்தைகளைக் காப்பாற்றுவதற்காக கடந்த ஒன்றரை மாதங்களாக இந்தப் பெட்ரோல் பங்கில் வேலை செய்து வந்துள்ளார்.

கருத்து வேறுபாடு காரணமாகக் கணவரைப் பிரிந்து வாழ்ந்த பூஜாவை, வேலை செய்யும் இடத்திற்கே தேடி வந்த சத்யம், கண்ணிமைக்கும் நேரத்தில் கத்தியால் குத்திச் சாய்த்துள்ளார். அங்கிருந்தவர்கள் சுதாரிப்பதற்குள் பூஜாவின் கழுத்தை அறுத்துவிட்டு அவர் தப்பியோடினார்.

இந்தச் சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த போலீசார், தப்பியோடிய சத்யத்தைக் கைது செய்துள்ளனர். இதற்கிடையே, பூஜாவின் தோழி சாயா கூறுகையில், “பூஜாவைக் கணவர் அடிக்கடி அடித்துத் துன்புறுத்தி வந்தார்.

இது குறித்து கடந்த செவ்வாய்க்கிழமை அன்றே காவல் நிலையத்தில் புகார் அளித்தும், போலீசார் அதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.

காவல்துறை உரிய நேரத்தில் நடவடிக்கை எடுத்திருந்தால் இன்று பூஜா உயிரோடு இருந்திருப்பார்” என அழுதுகொண்டே தெரிவித்தார். பாதுகாப்பு அளிக்க வேண்டிய போலீசாரின் அலட்சியத்தால் ஒரு இளம் பெண்ணின் உயிர் பறிபோயுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.