கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில், யாரும் எதிர்பார்க்காத வகையில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார் இளம் வீரர் முகுல் சௌத்ரி. கடைசி ஓவரில் இரண்டு இமாலய சிக்ஸர்களைப் பறக்கவிட்டு, தோனியின் பாணியில் ‘ஹெலிகாப்டர்’ ஷாட்களால் மைதானத்தை அதிரவைத்த இவரைப் பற்றித்தான் இப்போது கிரிக்கெட் உலகம் பேசிக்கொண்டிருக்கிறது.

லக்னோ அணி வெற்றி பெறுமா என்ற சந்தேகம் பலருக்கு இருந்த நிலையில், அர்ஜுன் டெண்டுல்கர் மட்டும் தனது சக வீரரான முகுல் மீது முழு நம்பிக்கை வைத்திருந்தார். அந்த நம்பிக்கையை மெய்ப்பிக்கும் வகையில், 2.60 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்ட முகுல் சௌத்ரி, ஆட்டத்தின் போக்கையே மாற்றி வெற்றியைத் தேடித்தந்து நாயகனாக உருவெடுத்தார்.

வெற்றிக்குப் பின் வைரலாகி வரும் வீடியோ ஒன்றில், ரூ. 2.60 கோடி ஊதியத்தில் நீங்கள் முதலில் செய்யப்போகும் காரியம் என்ன? என்ற கேள்விக்கு முகுல் மிக உருக்கமாகப் பதிலளித்துள்ளார். எங்கள் குடும்பச் சூழல் மிகவும் ஏழ்மையானது. எனது கிரிக்கெட் கனவுக்காக என் தந்தை வாங்கிய கடன்கள் ஏராளம். இந்த பணத்தில் நான் முதலில் செய்யப்போகும் காரியம், என் தந்தையின் தலையில் இருக்கும் கடன் சுமையை இறக்கி வைப்பதுதான். எனக்காக அவர் செய்த தியாகங்களுக்கு நான் செய்யும் முதல் கைமாறு இது என்றார்.

கிரிக்கெட் என்பது ஒரு விலையுயர்ந்த விளையாட்டு என்பதை நினைவுகூர்ந்த முகுல், “ஒரு பேட் வாங்கவே ரூ. 20,000 முதல் ரூ. 30,000 வரை தேவைப்படும். எனது பயிற்சிக்காகவும், கிரிக்கெட் உபகரணங்கள் வாங்கவும் என் தந்தை தனது ஹோட்டல் தொழிலுக்காக வாங்கிய கடனைப் பயன்படுத்தினார். ஒருகட்டத்தில் எனது கிரிக்கெட் செலவுகளுக்காக நாங்கள் குடியிருந்த வீட்டைக்கூட விற்க நேரிட்டது. இப்போது அந்தப் பணத்தைக் கொண்டு மீண்டும் ஒரு வீட்டைக் கட்ட வேண்டும் என்பதே என் ஆசை என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

ராஜஸ்தான் மாநிலம் ஜுன்ஜுனு மாவட்டத்தைச் சேர்ந்த 21 வயதான முகுல் சௌத்ரி, ரூ. 30 லட்சம் அடிப்படை விலையுடன் ஏலத்தில் பங்கேற்றார். இவரை எடுக்க ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கிடையே கடும் போட்டி நிலவிய நிலையில், இறுதியில் லக்னோ அணி ரூ. 2.60 கோடிக்கு இவரைத் தக்கவைத்துக் கொண்டது. மேலும் கிரிக்கெட் வீரராகும் வரை கிராமத்திற்குள் நுழையாதே என்று தந்தை போட்ட சவாலை ஏற்று, இன்று ஒரு நட்சத்திரமாக ஜொலிக்கும் முகுல் சௌத்ரிக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.