ஐபிஎல் 2026 தொடரின் ஒவ்வொரு போட்டியும் ரசிகர்களுக்குப் புதிய ஆச்சரியங்களை அளித்து வருகிறது. அந்த வகையில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) அணிக்கு எதிரான போட்டியில், தோல்வியின் பிடியிலிருந்த லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை ஒற்றை ஆளாக மீட்டெடுத்த 21 வயது இளம் வீரர் முகுல் சௌத்ரியின் அதிரடி ஆட்டம் கிரிக்கெட் உலகில் பேசுபொருளாகியுள்ளது.

வெற்றிக்குக் கடைசி 24 பந்துகள் தேவைப்பட்ட நிலையில், களத்திலிருந்த முகுல் சௌத்ரி மிகுந்த துணிச்சலுடன் விளையாடினார். இதில் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், அந்த 24 பந்துகளில் 21 பந்துகளை அவரே எதிர்கொண்டு, எதிர்முனையிலிருந்த வீரருக்கு ஸ்டிரைக் கொடுக்காமல் அதிரடி காட்டினார். வெறும் 27 பந்துகளில் 7 சிக்ஸர்கள் மற்றும் 2 பவுண்டரிகளுடன் 54 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் லக்னோ அணியை வெற்றிபெறச் செய்தார்.

முகுல் சௌத்ரியின் இந்த அதிரடி ஆட்டம் பலருக்கு ஆச்சரியத்தை அளித்தாலும், லக்னோ அணியின் சக வீரரான அர்ஜுன் டெண்டுல்கர் இதனை முன்பே கணித்திருந்தார். பிரபல யூடியூபர் சுபங்கர் மிஸ்ராவிற்கு அளித்த நேர்காணலில் அர்ஜுன் டெண்டுல்கர் முகுல் பற்றிப் பின்வருமாறு கூறியிருந்தார், “பயிற்சி ஆட்டங்களின் போதே முகுல் சௌத்ரியின் சிக்ஸர்களைப் பார்த்து நான் வியந்துவிட்டேன். மைதானத்தின் அனைத்து திசைகளிலும் சிக்ஸர் அடிக்கும் ஆற்றல் அவரிடம் உள்ளது. ஸ்கொயர் லெக், பாயிண்ட், பவுலரின் தலைக்கு மேல் என எந்தப் பந்தையும் எல்லைக்கோட்டிற்கு அப்பால் அனுப்பும் அவரது பேட்டிங் திறன் என்னை மிகவும் கவர்ந்துள்ளது என்றார்.

 

அர்ஜுன் டெண்டுல்கரின் இந்த எச்சரிக்கையை எதிரணிகள் கவனிக்கத் தவறியதன் விளைவை இப்போது கொல்கத்தா அணி அனுபவித்துள்ளது. முகுல் சௌத்ரியின் அபாரமான திறமையை ஏலத்திற்கு முன்பே கணித்திருந்த லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் நிர்வாகம், கடும் போட்டிக்கு இடையே ரூ. 2.60 கோடி கொடுத்து அவரைத் தக்கவைத்தது. தற்போது அந்த முதலீட்டிற்கு ஏற்ற பலனை முகுல் சௌத்ரி தனது பேட்டிங் மூலம் நிரூபித்து வருகிறார்.

திறமையான வீரர்கள் நிறைந்த லக்னோ அணியில் அர்ஜுன் டெண்டுல்கருக்கு ஆடும் லெவனில் (Playing 11) இடம் கிடைப்பது சவாலாக இருந்தாலும், தனது சக வீரரின் வெற்றியை அவர் கொண்டாடி வருவது ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஐபிஎல் தொடரில் முகுல் சௌத்ரி ஒரு முக்கிய ‘பவர் ஹிட்டராக’ வலம் வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.