உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூர் அருகே உள்ள பிதானு பகுதியில், மனிதநேயமே வெட்கித் தலைகுனிய வைக்கும் ஒரு கொடூரமான சம்பவம் அரங்கேறியுள்ளது.
சௌரப் சைனி என்ற நபர், மாந்திரீகம் மற்றும் மூடநம்பிக்கையின் உச்சகட்டமாகத் தனது 8 வயது மகள் வைஷ்ணவியை ஆற்றுப் பாலத்தில் வைத்துப் பலிகொடுக்க முயன்றுள்ளார்.
சம்பவத்தன்று, பெண் வேடமணிந்து பட்டுச் சேலை கட்டிக்கொண்டு தனது மகளை ராம் கங்கா கால்வாய் கரைக்கு அழைத்துச் சென்ற சௌரப், அங்கு வைத்துச் சிறுமியின் கழுத்தை நெரிக்க முயன்றுள்ளார்.
அந்தப் பிஞ்சு குழந்தையின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அங்கிருந்த பொதுமக்கள், உடனடியாகக் கால்வாயில் குதித்து நீந்திச் சென்று சிறுமியை மீட்டனர்.
ஆத்திரமடைந்த மக்கள் அந்தத் தந்தையை நையப்புடைத்துப் போலீஸாரிடம் ஒப்படைத்தனர். விசாரணையில், சௌரப் நீண்ட நாட்களாக மனநல பாதிப்பில் இருப்பதும், இறந்த தனது தந்தையின் ஆவி தன்னுள் புகுந்துவிட்டதாகக் கூறிப் பெண் வேடமிட்டு மாந்திரீக காரியங்களில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது.
அவரது வினோத பழக்கங்களால் 7 ஆண்டுகளுக்கு முன்பே அவரது மனைவி அவரை விட்டுப் பிரிந்து சென்றுள்ளார். தற்போது அந்தச் சிறுமி தனது சித்தப்பாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். மாந்திரீகம் என்ற பெயரில் மகளையே கொல்லத் துணிந்த தந்தையின் செயல் அந்தப் பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
