தமிழக வெற்றிக் கழகத்தின் மதுரை தெற்கு மாவட்ட செயலாளர் தங்கபாண்டி மீது, கட்சியில் பதவிகள் வழங்குவதற்காக லட்சக்கணக்கில் பணம் வசூலித்ததாக எழுந்துள்ள புகார் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அண்மையில் தற்கொலைக்கு முயன்ற கட்சியின் மகளிர் அணி நிர்வாகி சர்மிளா, தங்கபாண்டி மீது சாதி ரீதியாக பாகுபாடு காட்டுவதாகவும், வசதி படைத்தவர்களிடம் பணம் பெற்றுக்கொண்டு பதவிகளை விற்பனை செய்வதாகவும் குற்றம் சாட்டினார்.
மேலும் தனது நகைகளை அடகு வைத்து கொடுத்த பணத்தை அவர் திருப்பித் தரவில்லை என்றும், இதனால் ஏற்பட்ட மன உளைச்சலால் தான் தற்கொலை முடிவை எடுத்ததாகவும் அவர் வேதனையுடன் தெரிவித்தார். இந்த விவகாரத்தில் தற்போது சர்மிளாவின் கணவரும் கட்சியின் தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகியுமான பாலாஜியும் அதிரடியான புகார்களை முன்வைத்துள்ளார்.
இதனால் கட்சி வளர்ச்சி நிதி மற்றும் ஐடி நிறுவன முதலீடு என்ற பெயரில் தங்கபாண்டி சுமார் 16 லட்சம் ரூபாய் வரை பெற்றுக்கொண்டதாகவும், கட்சி ஆட்சிக்கு வந்தவுடன் இந்தத் தொகை இரட்டிப்பாகத் திருப்பித் தரப்படும் என ஆசை வார்த்தை கூறி ஏமாற்றியதாகவும் அவர் செய்தியாளர்களிடம் கூறினார். மாவட்ட அளவில் கட்சிப் பதவிகளைப் பெறுவதற்குப் பெருந்தொகை லஞ்சமாகக் கேட்கப்படுவதாக எழுந்துள்ள இந்த ஊழல் குற்றச்சாட்டுகள், தமிழக அரசியல் வட்டாரத்தில் த.வெ.க. நிர்வாகிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
