கேரள மாநிலத் தேர்தல் ஆணையம் அனுப்பிய அதிகாரப்பூர்வ கடிதம் ஒன்றில், இந்தியத் தேர்தல் ஆணையத்தின் முத்திரைக்குப் பதிலாகப் பாரதிய ஜனதா கட்சியின் (பாஜக) முத்திரை இடம்பெற்றிருந்தது அரசியல் வட்டாரத்தில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.
கடந்த மார்ச் 19-ஆம் தேதியிட்ட தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வக் கடிதம் ஒன்றில், ஆணையத்தின் முத்திரை இருக்க வேண்டிய இடத்தில் பாஜகவின் தாமரைச் சின்னம் மற்றும் அக்கட்சியின் பெயர் பொறிக்கப்பட்ட முத்திரை இடம்பெற்றிருந்தது. இதனை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஎம்) தனது அதிகாரப்பூர்வ ‘எக்ஸ்’ (X) சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்து கடும் விமர்சனங்களை முன்வைத்தது.
இது தொடர்பாகச் சிபிஎம் வெளியிட்டுள்ள பதிவில், “இந்தியத் தேர்தல் ஆணையத்தையும் பாஜகவையும் ஒரே சக்திதான் இயக்குகிறது என்பது ரகசியமல்ல. அப்படி இருந்தாலும், குறைந்தபட்சம் தனித்தனி மேஜைகளையாவது பயன்படுத்துங்கள். எந்த பட்டனை அழுத்தினாலும் தாமரை சின்னம் வரும் என்பது போல, இதுவும் ஒரு தற்செயலான நிகழ்வா?” என்று கேள்வி எழுப்பியுள்ளது. இதேபோல், கேரள மாநில காங்கிரஸ் கட்சியும் இந்த விவகாரத்தைக் கடுமையாக விமர்சித்துள்ளது.
இந்த விவகாரம் பூதாகரமானதைத் தொடர்ந்து, இந்தியத் தேர்தல் ஆணையம் உடனடியாக விளக்கம் அளித்துள்ளது. இது குறித்து ஆணையம் கூறுகையில், “இது ஒரு துரதிர்ஷ்டவசமான ‘எழுத்துப் பிழை’ . தவறுதலாக பாஜகவின் முத்திரை பயன்படுத்தப்பட்டுவிட்டது. இந்தத் தவறு உடனடியாகச் சரி செய்யப்படும்” என்று உறுதியளித்துள்ளது.
மேலும் தேர்தல் ஆணையம் பாஜகவின் ‘கைப்பாவையாக’ செயல்படுவதாக எதிர்க்கட்சிகள் தொடர்ச்சியாகக் குற்றம் சாட்டி வரும் நிலையில், இத்தகைய குளறுபடிகள் விவாதமாக பேசப்படுகிறது.
