பாஜகவில் தனக்கு உரிய பொறுப்புகள் வழங்கப்படாதது குறித்து நடிகர் சரத்குமார் தனது கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். வரும் தேர்தலில் தானும், தனது மனைவி ராதிகாவும் போட்டியிடப் போவதில்லை என்றும், கட்சியின் தலைமை வற்புறுத்தினாலும் தேர்தலில் நிற்கப் போவதில்லை என்றும் அவர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். பாஜகவில் இணைந்த பிறகு தனக்குத் தகுந்த அங்கீகாரம் கிடைக்கவில்லை என்ற ஆதங்கத்தையே சரத்குமார் இவ்வாறு வெளிப்படுத்தியிருப்பதாகத் தெரிகிறது.

​அதேசமயம், தன்னுடன் இத்தனை காலம் பயணித்த ஆதரவாளர்களுக்குத் தேர்தலில் போட்டியிட உரிய வாய்ப்பு வழங்க வேண்டும் என்ற பட்டியலை பாஜக தேசிய தலைமைக்கு அவர் வழங்கியுள்ளார். தனது இந்தக் கோரிக்கைக்குத் தலைமை செவிசாய்த்தே ஆக வேண்டும் என்று அவர் பிடிவாதமாகத் தெரிவித்துள்ளதால், தமிழக பாஜக வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சரத்குமாரின் இந்த திடீர் போர்க்கொடி, தேர்தலில் அக்கட்சியின் கூட்டணி மற்றும் வேட்பாளர் தேர்வில் எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற கேள்வி எழுந்துள்ளது.